பதிவு செய்த நாள்
02
மே
2019
04:05
சேலம்: தமிழகத்தில், பருவ மழை பெய்து நாடு செழிக்க வேண்டி, முதன்மை கோவில்களில் யாகம் நடத்த, இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் பணீந்திர ரெட்டி
உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர், அறநிலையத்துறை இணை, உதவி கமிஷனர்கள், கோவில் செயல் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விபரம்: நடப்பு, 2019-20 விகாரி ஆண்டில்
நல்ல பருவ மழை பெய்து, நாடு செழிக்க இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் மழை வேண்டி யாகம் செய்ய வேண்டும். கோவில்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப யாகங்கள் நடத்தப்பட வேண்டும்.
அதன் விபரம்:
* பர்ஜன்ய சாந்தி வருண ஜபம் வேள்வி செய்து சிறப்பு அபிஷேகம் செய்தல்.
* நந்தி பெருமானுக்கு நீர்த் தொட்டி கட்டி நந்தியின் கழுத்து வரை நீர் நிரப்பி வழிபாடு செய்ய வேண்டும்.
* திருஞானசம்பந்தர் இயற்றிய, 12ம் திருமுறையில் தேவார மழை பதிகத்தை மேகரா குறிஞ்சி என்ற பண்ணில் பாடி வேண்டுதல் செய்ய வேண்டும்.
* நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், வீணை வாத்தியங்களுடன் அமிர்தவர்ஷினி மேகவர்ஷினி, கேதாரி ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களை கொண்டு
வாசித்து வழிபாடு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு யாகங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. யாகம் நடத்தப்பட உள்ள கோவில்களில், நடத்தப்பட உள்ள நாட்களை பட்டியலிட்டு, இன்று (மே, 2) மாலைக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். யாகம் முடிந்த நிலையில், அது குறித்த விபரங்களை அந்தந்த மண்டல இணை கமிஷனர் மூலம், முதன்மை செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.