பதிவு செய்த நாள்
04
மே
2019
03:05
கரூர்: கரூர், மாரியம்மன் கோவில் திருவிழா துவங்குவதை யொட்டி, அமராவதி ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கட்டட இடிபாடுகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை விடப் பட்டுள்ளது.
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா வரும், 12ல் துவங்குகிறது. இத்திருவிழாவில், கம்பம் அமராவதி ஆற்றில் விடுதல் முக்கிய நிகழ்வாகும். அதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர். கரூர் மட்டுமல்லாது அருகிலுள்ள ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், கோவிலுக்கு வந்து, நேர்த்திக் கடன் செலுத்துவர்.
அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாவிட்டால், நகராட்சி சார்பில் குழாய்கள் போட்டு, பக்தர்கள் குளிக்க, புனித நீர் எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும்.
வழக்கமாக இப்பணிகள் முன்னதாகவே துவங்கிவிடும். நடப்பாண்டில், திருவிழா துவங்கும் நிலையில், இதற்கான பணி இன்னும் துவங்கவில்லை. அமராவதி ஆற்றில் கட்டடங்களை இடித்த மண், கற்கள் போன்றவை கொட்டப்பட்டுள்ளன. சேதமடைந்த தரைப்பாலத்தின் சிமென்ட் குழாய்கள் போன்றவையும் போட்டுவைக்கப்பட்டுள்ளன. மேலும், கோழி இறைச்சி கழிவுகள், குப்பை கூளங்கள் போன்றவை ஆற்றில் குவிந்துள்ளன. ஆனால், பக்தர்கள் கூடும் இடத்தை சுத்தப்படுத்தும் பணி இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. ஆற்றில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்த, நகராட்சி நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.