பதிவு செய்த நாள்
09
மே
2019
12:05
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில், ராமானுஜர் கோவில் தேரோட்டம், நேற்று (மே., 8ல்) கோலா கலமாக நடந்தது.
ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்த வைணவ மகான் ராமானுஜரின், 1,002ம் ஆண்டு உற்சவ விழா, 30ம் தேதி, ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் துவங்கியது.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று (மே., 8ல்) நடந்தது. காலை, 7:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில், ராமானுஜர் நிலையத்திலிருந்து புறப்பட்டார். ஏராளமான பக்தர்கள், வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தேரடி சாலை, காந்தி சாலை, திருவள்ளூர் மெயின் ரோடு, திருமங்கையாழ்வார் சாலை வழியாக சென்ற தேர், நிலையத்தில் திரும்பியது. காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட, பல மாவட்டங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.தேர் திருவிழாவில், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க, பெண் போலீசார் மூலம், பெண்களுக்கு, சேப்டி பின் வழங்கப்பட்டது.
மேகமூட்டத்தால் குளுகுளு
அக்னி நட்சத்திரம் துவங்கிய நிலையில், நேற்று முன்தினம் (மே., 7ல்) மாலை, ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டத்தில் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூரில் நேற்று (மே., 8ல்) காலை, மேகமூட்டத்துடன் வானம் காணப்பட்டதால் குளுமையான சூழல் ஏற்பட்டது. வெப்பம் தணிந்ததால், தேர் திருவிழாவுக்கு வந்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
குப்பை உடனுக்குடன் அகற்றம்
தேர் திருவிழாவின் போது, பல இடங்களில் அன்னத்தானம் வழங்கப்பட்டது. அன்னதானத்துக்கு பயன்படுத்தப்பட்ட தட்டு, டம்ளர்கள், கேன்கள் உள்ளிட்டவை, அதிக அளவில் குப்பையாக சேர்ந்தன. இவற்றை, பேரூராட்சி துப்புரவு ஊழியர்கள் மற்றும் தனியார் அமைப்பினர் உடனுக்குடன் அகற்றினர்.