பதிவு செய்த நாள்
09
மே
2019
02:05
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் நடந்த குண்டம் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேட்டுப்பாளையம் பாக்குக்கார வீதியில் மிகப் பழமையான மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் குண்டம் விழா கடந்த மாதம், 23ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 26ம் தேதி குத்துவிளக்கு பூஜையும், 30ம் தேதி அக்னி கம்பமும் நடப்பட்டது. இம்மாதம், 6ம் தேதி பேட்டை மகா மாரியம்மன் கோவிலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம்
செய்யப்பட்டது. நேற்று முன் தினம் (மே., 7ல்) இரவு குண்டம் திறக்கப்பட்டது. நேற்று (மே., 8ல்) காலை, 8:00 மணிக்கு பவானி ஆற்றிலிருந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அழைத்து
வரப்பட்டார். தலைமை பூசாரி குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து முதலில் இறங்கினார். அதைத் தொடர்ந்து உதவி பூசாரிகள், ஆண், பெண் பக்தர்கள் என வரிசையாக குண்டம்
இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். நேற்று (மே., 8ல்) மதியம் மாவிளக்கு பூஜையும், இன்று (மே., 9ல்) மாலை, 7:00 மணிக்கு அம்மன் வீதி உலாவும், அபிஷேக பூஜையும், 14 ம் தேதி மறுபூஜையும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்து வருகின்றனர்.