பதிவு செய்த நாள்
11
மே
2019
02:05
சென்னை:சென்னை, துரைப்பாக்கத்தில், ஆதி சங்கரர் ஜெயந்தியை முன்னிட்டு நடந்த பூஜைகளில், காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
ஆதி சங்கரர் ஜெயந்தியை முன்னிட்டு, காஞ்சி காமகோடி பீடம், மடம் சமஸ்தானம் சார்பில், ஆண்டு தோறும், வேத பாராயணம், விசேஷ பூஜை, உபன்யாசம், சங்கரவிக்ரஹா வீதி ஊர்வலம் என, சிறப்பாக கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு, காஞ்சி காமகோடி பீடாதிபதி, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சென்னையில் யாத்திரை மேற்கொண்டு உள்ளார்.
துரைப்பாக்கம், சங்கரா மெட்ரிகுலேஷன் பள்ளியில், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முகாமிட்டார். நேற்று (மே., 10ல்) அங்கு, ஆதி சங்கரர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. காலையில், காயத்ரி ஜெபம் நடந்தது. அதோடு, மழை வேண்டியும், மத நல்லிணக்கம், ஒற்றுமையை வலியுறுத்தியும், மகா சங்கல்ப பிராத்தனை நடந்தது. மேலும், 3 மணி நேரம், 1008 காயத்ரி மந்திரம் பேசி, விசேஷ பூஜை நடத்தப்பட்டது.
தொடர்ந்து, 10 - 60 வயதுடையோர் பங்கேற்ற, வீணை இசை கச்சேரி நடந்தது. பாடல்கள், அமிர்த வர்ஷினி ராகத்தில் பாடப்பட்டன.மாலை, மடத்து முகாமில் இருந்து, ஊர்வலமாக,
காரப்பாக்கம், கங்கையம்மன் கோவில் சென்று, அங்கு, விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. பின், ஆசார்யாளின் விக்ரஹம், வேத கோஷத்துடன், ஊர்வலமாக, மடம் முகாம் சென்றடைந்தது.
இதில், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
ஊர்வலத்தின் போது, சைத்தன்யா பஜனை மண்டலி மற்றும் மகிளா பஜனை மண்டலி குழுவினரின், வீதி பஜனை பாடப்பட்டது.நிகழ்ச்சியில், வேதாத்யயனம் செய்து முடித்த
மாணவர்களுக்கு, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சான்றிதழ் வழங்கினார்.விழாவில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.