பதிவு செய்த நாள்
13
மே
2019
01:05
பொன்னேரி: பொன்னேரியில், ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடந்தது. பொன்னேரி, திருவேங்கிடபுரம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, திருவேங்கடமுடையான் திருக்கல்யாணக் குழு சார்பில், ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாணம் வைபவம், தசரதன் நகர் பூங்காவில் நடந்தது.
மாலை, 5:00 மணிக்கு, திருவேங்கிடபுரம் பொன்னியம்மன் கோவிலிருந்து, திருக்கல்யாண சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. திருக்கல்யாண மேடையில், ஒய்யாளி, மாலை மாற்றுதல், பூப்பந்து, சங்கல்பம், மாங்கல்ய பூஜை, ஓமம் வளர்த்தல் ஆகியவை நடைபெற்றன. இரவு, 8:00 மணிக்கு, ஸ்ரீநிவாச பெருமான் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. அப்போது, கூடியிருந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள், ‘ஓம் நமோ நாராயணா, ஓம் நமோ நாராயணா’ என, கோஷம் எழுப்பியபடி பெருமானை வணங்கினர். திருக்கல்யாணம் முடிந்து, தீபாராதனையும், தீர்த்த பிரசாதமும் வழங்கப்பட்டன. திருக்கல்யாண வைபவத்தில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பெருமாளை வணங்கி சென்றனர். இறுதியில் கல்யாண விருந்து வழங்கி, பக்தர்கள் உபசரிக்கப்பட்டனர்.