பதிவு செய்த நாள்
13
மே
2019
01:05
கோதண்டராமர் சிலை செல்வதில் சிக்கல்ஓசூர் : ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால், தென்பெண்ணை ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், கோதண்டராமர் சிலை செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையோரம் கடந்த, 9 முதல் கோதண்டராமர் சிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இச் சிலையை, பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தென்பெண்ணை ஆற்று பாலத்தை, கடக்க முடியாது என்பதால், ஆற்றின் குறுக்கே தற்காலிக மண் சாலை அமைக்கப்படுகிறது.
ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்றதால், மண் சாலை பணியை முழுமையாக முடிக்க முடியவில்லை. இதனால் கடந்த, 10 இரவு முதல், கெலவரப்பள்ளி அணையில் இருந்து,
தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.ஆற்றில் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தபோது, தற்காலிக சாலை அமைக்கும் பணிகள் நடந்தன. இதனால்,
நேற்று முன்தினம் (மே., 11ல்) இரவு தற்காலிக சாலையை கோதண்டராமர் சிலை கடந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் (மே., 11ல்) இரவு, தண்ணீர் வரத்து வினாடிக்கு, 320 கன அடியாக உயர்ந்தது.
அணையின், மொத்த கொள்ளளவான, 44.28 அடியில், 42.31 அடிக்கு தண்ணீர் தேங்கியது. அதற்கு மேல் அணையில் தண்ணீரை தேக்க முடியாது என்பதால், பாதுகாப்பு கருதி,
தென்பெண்ணை ஆற்றில் நீரை திறந்து விட வேண்டிய கட்டாயம் உருவானது.இதனால், நேற்று முன்தினம் (மே., 11ல்) இரவு, 11:00 மணிக்கு மேல், அணையில் இருந்து இரு ஷட்டர்கள் திறக்கப்பட்டு படிப்படியாக வினாடிக்கு, 320 கன அடி வரை ஆற்றில் தண்ணீர் வெளியேற்றப் பட்டது.அதனால் தென்பெண்ணை ஆற்றில், தற்காலிக சாலை பணியை நேற்றும்(மே., 12ல்), மேற்கொள்ள முடியாமல் போனது. கோதண்டராமர் சிலையும், நேற்று (மே., 12ல்) சாலையை கடக்க முடியாததால், பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டது.