பதிவு செய்த நாள்
13
மே
2019
02:05
கோவை:அமர்நாத் புனித யாத்திரை செல்ல, மண்டல அளவில், 125 பேருக்கு சுகாதார சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.அமர்நாத் புனித யாத்திரை இந்த ஆண்டு ஜூலை, 1ல் துவங்கி, ஆக., 15ம் தேதி வரை நடக்கிறது. இந்த யாத்திரைக்கு முன்பதிவு செய்வது அவசியம். யாத்திரைக்கான அனுமதிக்கு அங்கீகரிக்கப்பட்ட டாக்டர், தனியார் மருத்துவமனைகளால், வழங்கப்படும் கட்டாய சுகாதார சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அசோகன் கூறியதாவது:கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்கள், கேரளா ஆகிய பகுதியை சேர்ந்தவர்கள், கட்டாயச் சுகாதார சான்றிதழ் பெற்றுள்ளனர். யாத்திரைக்கு செல்பவர்களுக்கு, அதற்காக வரையறை செய்யப்பட்ட உடல் தகுதி, வயது இருக்கவேண்டும்.
உடற்பயிற்சி, ரத்த அழுத்தம், இ.சி.ஜி., மலையேறுவதில் பயிற்சி உள்ளிட்ட பரிசோதனைகள் மூலம், உடல் நலன் உறுதி செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதுவரை, 125 பேருக்கு இச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நான்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.