பதிவு செய்த நாள்
16
மே
2019
11:05
சென்னை: திருவண்ணாமலையில், இரு ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட, 5 கோடி ரூபாய் மதிப்புள்ள, மரகதலிங்கம் மீட்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் கிராமத்தில், ஜமீன் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு பங்களா வளாகத்தில், மனோன்மணியம் அம்மன் கோவில் உள்ளது. அங்கு, அரை அடி உயரமான, பழைமையான, மரகதலிங்கம் ஒன்று இருந்தது. அதன் மதிப்பு, 5 கோடி ரூபாய்.மனோன்மணியம் அம்மன் கோவிலில், வேட்டவலத்தைச் சேர்ந்த, சண்முகம் என்பவர், பூஜை செய்து வந்தார்.
இக்கோவிலில், 2017, ஜன., 8ல், மரகதலிங்கம், அதன் மேல் சாத்தப்படும் வெள்ளி நாகாபரணம், அம்மன் வெள்ளி கிரீடம், தங்கத் தாலி, வெள்ளி ஒட்டியாணம் ஆகியவை திருடு போயின. இதுகுறித்து, வேட்டவலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். அவர்களால் துப்பு துலக்க முடியவில்லை. இந்த தகவல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி, பொன் மாணிக்க வேலுக்கு தெரிய வந்தது. அவரது தலைமையிலான போலீசார், 10 நாட்களாக, வேட்டவலத்தில் முகாமிட்டு, விசாரித்து வந்தனர்.சந்தேகத்தின்படி, இரு தினங்களுக்கு முன், ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த, மகேந்திர பண்டாரியிடம் விசாரணை நடத்தினர். அவரது நடவடிக்கைகளையும் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று, ஜமீன் குடும்ப பங்களா காவலாளியான, வேட்டவலத்தைச் சேர்ந்த, பச்சையப்பன், 56, என்பவர், பங்களா அருகில் உள்ள, குப்பை தொட்டியில் மரகதலிங்கம் கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். வேட்டவலம் போலீசார், மரகத சிலையை கைப்பற்றி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பச்சையப்பனிடம், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.