பதிவு செய்த நாள்
16
மே
2019
12:05
திருப்பூர்: பயிரை பாதுகாப்பதற்காக, காட்டுப்பன்றியுடன் போராடி, வீரமரணம் எய்திய வீரருக்கான நடுகல், வெள்ளக்கோவில் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில், வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தினர், ஆய்வு மேற்கொண்டனர். இதில், வீரன் நடுகல் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டது.
இது பற்றி மைய இயக்குனர், ரவிகுமார் கூறியதாவது: வேளாண் தொழிலின் அச்சாணியாக விளங்கிய பயிர்களை பாதுகாப்பது, வீரமறவர்களின் கடமையென, தமிழர்கள் வாழ்ந்துள்ளனர். பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் காட்டுப்பன்றிகளை கொல்வது மிகவும் சிரமம். காட்டுப்பன்றியுடன் போரிட்டு வீரமரணம் எய்தும் வீரர்களுக்கு, பன்றி குத்திப்பட்டான் நடுகல் நட்டு வழிபட்டுள்ளனர். வெள்ளக்கோவிலில் கண்டறியப்பட்ட நடுகல், 145 செ.மீ., உயரமும், 85 செ.மீ., அகலமும் உள்ளது. நடுகல்லின் சிறப்பம்சமே, வீரன் பன்றியுடன் போராடும் போது, நன்றியுள்ள வேட்டை நாய், பன்றியின் இடது பின்னங்காலை தாக்கிக் கொண்டிருப்பது தான். நடுகல்லில் எழுத்து எதுவும் இல்லை. கி.பி., 16ம் நுாற்றாண்டை சேர்ந்தது என்று தெரிய வருகிறது. இவ்வாறு, ரவிகுமார் கூறினார்.