பதிவு செய்த நாள்
17
மே
2019
11:05
வத்திராயிருப்பு, வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரிக்கு வரும் பக்தர்களுக்கு காலை 6:00 மணி முதல் சர்க்கரை பொங்கல், புளியோதரை அன்னதானம் வழங்கப்படும், பக்தர்கள் வயிறாற சாப்பிடலாம் என அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பவுர்ணமி, அமாவாசையையொட்டி பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். அங்கு அன்னதானம் வழங்கிய தனியார் மடங்களை மூட அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதனால் போதிய உணவு, தண்ணீர் கிடைக்காமல் பக்தர்கள் தவித்தனர்.இதுதொடர்பாக தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திரரெட்டி சதுரகிரியில் ஒருநாள் தங்கி நேரடி ஆய்வு மேற்கொண்டார்.இதனிடையே வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முதல் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கபட்டுள்ளனர். வெயிலின் தாக்கம் காரணமாக நேற்று 140 பக்தர்கள் மட்டுமே மலை ஏறினர். நாளை (மே 18) விடுமுறை என்பதால் அதிகளவில் பக்தர்கள் வரவாய்ப்பு உள்ளது.
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கோயில் செயல் அலுவலர் சிவராமசூரியன் கூறியதாவது: தாணிப்பாறையிலிருந்து கோயில் வரை வனத்துறை அனுமதித்த 5 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் தொடர்ந்து நிரப்பப்படும்.கோயிலில் காலை 6:00 மணி முதல் சர்க்கரை பொங்கலும், புளியோதரையும் அன்னதானமாக வழங்கப்படும். எத்தனை முறை வேண்டுமானாலும் வாங்கி வயிறார சாப்பிடலாம். இதற்காக 750 கிலோ அரிசி மலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, என்றார்.
பக்தர்களே உஷார்: வசதிகள் செய்துள்ளதாக அறநிலையத்துறை அறிவித்திருந்தாலும் பக்தர்கள் உணவு, தண்ணீரை கொண்டு செல்வது நல்லது. ஓடைகளில் தண்ணீர் இல்லை. மலைக்கு சுமை கொண்டு செல்லும் தொழிலாளர்களும் ஸ்டிரைக்கில் உள்ளனர். எனவே கடைகளில் உணவு பொருட்கள் கிடைப்பது சந்தேகம்.
உண்டியலில் வெளிநாட்டு கரன்சி: கடந்த மே 12, 13ல் திண்டுக்கல் அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம், ஆய்வாளர் முருகானந்தம், கோயில் செயல் அலுவலர் சிவராமசூரியன் முன்னிலையில் சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தனமகாலிங்கம் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. ரூ.40 லட்சத்து ஆயிரத்து 19 ரூபாய், 45 கிராம் தங்கம், 676 கிராம் வெள்ளி இருந்தது. மேலும், மலேசியா, சிங்கப்பூர், சவுதி, புருனே நாட்டு கரன்சிகள் 15ம் இருந்தன.