பதிவு செய்த நாள்
27
மே
2019
02:05
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில், வைகாசி திருவிழாவையொட்டி நேற்று (மே., 26ல்), மறுகாப்பு கட்டுதல், பக்தர்கள் மாவிளக்க எடுத்தல் நடந்தது. கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா, கடந்த, 12ல், கம்பம் நடுதலுடன் துவங்கியது. அதை தொடர்ந்து, பெண்கள் கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றி வழிபட்டனர். அங்கப்பிரதட்சணம் செய்தல் போன்ற
நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகம் வரத்துவங்கியதால், நெரிசலைத் தவிர்க்க, கோவில் நுழைவு வாயிலில் இரும்பு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், கருவறைக்கு செல்லும் பக்தர்கள் படிக்கட்டுகள் வழியாகவும், கோவிலில் இருந்து வெளியே செல்லும் பக்தர்கள், படிக்கட்டின் கீழ் பகுதியில், நெரிசலில் சிக்காமல் எளிதாக நடந்து செல்லவும் வழிசெய்யப்பட்டுள்ளது. அலகு குத்துதல், அக்னிச் சட்டி எடுத்தல், கரும்பு தொட்டிலில் குழந்தைகளை எடுத்துச் சென்று நேர்த்திக் கடன் செலுத்துதல், மாவிளக்கு ஊர்வலம் போன்றவை நேற்று (மே., 26ல்) நடந்தன. முன்னதாக, மறுகாப்பு கட்டப்பட்டது. இன்று (மே., 27ல்) காலை, 7:00 மணிக்கு தேராட்டம் நடக்கிறது. வரும், 29ல், மாலை, 5:00 மணிக்கு, கோவிலில் இருந்து, பசுபதி பாளையம் அமராவதி ஆற்றுக்கு கம்பம் எடுத்துச் செல்லப்படுகிறது.
அதையொட்டி, அமராவதி ஆற்றில் செயற்கை நீருற்றுகள், பொழுதுபோக்கு சாதனங்கள் அமைத்தல், மின்விளக்கு பொருத்தல், ஆற்றின் தற்காலிக மண் பாலத்தில் மூங்கில்
தடுப்புகள் அமைத்தல் போன்ற பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. திருவிழாவையொட்டி, கரூர் மாவட்ட போலீசார் மற்றும் சிறப்பு காவல் படை போலீசார், 300க்கும் மேற்பட்டோர்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.