* பசிக்கும் போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர் குடியுங்கள். குளிர்பானங்களை தவிர்த்து விடுங்கள். * போதுமான அளவு உணவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது ஜீரணமாகி விடும். நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள். * தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். விரல்களில் அள்ளி சாப்பிடுங்கள். ஜீரணத்திற்கும், விரல்களுக்கும் தொடர்புண்டு. * தினமும் முடிந்தளவு விளையாடுங்கள். சிறுவர்களுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் தான். * தினமும் 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக சிந்தியுங்கள். உங்களின் ஆற்றல் வெளிப்படும். * இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்யுங்கள். * நல்ல புத்தகங்களைப் படியுங்கள். பிள்ளைகளுக்கும் அதிலுள்ள நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுங்கள். * குழந்தைகளிடம் ஸ்மார்ட் போனைக் கொடுக்காதீர்கள். தேவையற்ற விஷயங்களுக்காக வாட்ஸ்– ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள். * ஏழு மணி நேரம் தூங்குங்கள். இரவு 9:30 மணிக்கு தூங்கத் தொடங்கி, அதிகாலை 5:30 மணிக்கு எழுந்து விடுங்கள். * தினமும் 45 நிமிடம் நடைப்பயிற்சி செல்லுங்கள். இதனால் உடலும், மனமும் நலம் பெறும். * உங்களை ஒருபோதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். மற்றவர்கள் பயணிக்கும் பாதை வேறு; உங்கள் பாதை வேறு. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரயம். உங்களுக்கு தேவையானது உங்களிடமே உள்ளது. * எப்போதும் நேர்மையான எண்ணங்களை மட்டும் மனதில் எண்ணுங்கள். * கடுமையாக உழைக்காதீர்கள். உங்களால் முடிந்தளவு வேலை செய்யுங்கள். * மற்றவர் குறித்து புறம் பேசி சக்தியை வீணாக்காதீர்கள். உங்களைப் பற்றி புறம் பேசுவதையும் பொருட்படுத்தாதீர்கள். * வருமானத்தில் ஒரு பகுதியை தானமாக கொடுங்கள். தேவையுள்ளவர்களுக்கு உதவுங்கள். * கடந்த காலத்தை மறந்து விடுங்கள். முடிந்தது முடிந்தவையாக இருக்கட்டும். நிகழ்காலத்தில் வாழுங்கள். மகிழ்ச்சியும் மன அமைதியும் தானாக வரும். * யாரையும் வெறுக்காதீர்கள். வெறுப்பு உங்களை தான் பாதிக்கும். * வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் அதில் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். * சொல்ல வேண்டிய, இடங்களில் ’முடியாது’ என்று சொல்லிவிடுங்கள். இது பிரச்னைகளை ஆரம்பத்திலேயே தீர்க்க உதவும். * வெளிநாடு, வெளியூரில் உள்ள உறவினர், நண்பர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். மகிழ்ச்சி, பரஸ்பர அன்பை இது மேம்படுத்தும். * மன்னிக்கப் பழகுங்கள். தேவையான நேரத்தில் தயங்காமல் மன்னிப்பு கேளுங்கள். மனபாரம் நீங்கும். * 60 வயதிற்கு மேலும், 10 வயதிற்கு கீழும் உள்ளவர்களை கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்களுக்கு உங்கள் அன்பு தான் முக்கியம். * மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என கவலைப்படாதீர்கள். உங்களைப் பற்றி நினைப்பதே மற்றவரின் வேலையல்ல. * யார் எது சொன்னாலும் கேளுங்கள். ஆனால் மனதிற்கு சரியெனபட்டதை செய்யுங்கள்.