தானத்தை பிறர் மூலம் செய்யாமல், நேரடியாக மனம் உவந்து மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். பிறர் மீது காட்டும் அன்பில் கபடம் இருப்பது கூடாது. தீமையை வெறுக்க வேண்டும். நற்செயல்களில் மட்டும் ஈடுபட வேண்டும். அனைவரையும் சகோதரர்களாக கருதி அன்பு காட்ட வேண்டும். மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். நல்ல முயற்சிகளில் சோர்வில்லாமல் ஈடுபட வேண்டும். துயரம் வந்தால் மனம் கலங்காமல், நன்மையே நடக்கும் என நம்ப வேண்டும். நல்லவர்களுக்கு உதவ வேண்டும். வீட்டிற்கு வந்த விருந்தினர்களை மரியாதையாக நடத்த வேண்டும்.
துன்பம் இழைத்தவரையும் வாழ்த்த வேண்டும். மகிழ்ந்து சிரிப்பவர்களுடன் சேர்ந்து நாமும் சிரிக்க வேண்டும். மற்றவரின் துயரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். பகைவனாக இருந்தாலும், அவன் பசித்து வந்தால் சோறிட வேண்டும். அவனது நாக்கு வறண்டிருந்தால் தண்ணீர் தர வேண்டும். நன்மையைக் கொண்டு தீமையை வெல்ல வேண்டும். உன் ஆடையைப் பறிப்பவனிடம், அங்கியையும் எடுத்துக் கொள்ளும்படி சொல்ல வேண்டும். விழிப்புடன் இருக்க வேண்டும். பேராசையில் சிக்கி விடாதிருக்க ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ள வேண்டும். சொர்க்கத்திற்கு செல்லும் பாதை குறுகியது. அதில் குறைந்த நபர்களே நடக்கிறார்கள். அகலமான பாதை கொண்ட நரகத்திற்கு மக்கள் கூட்டமாக செல்கின்றனர். அப்பாதையில் செல்லாமல் இருக்கும் வகையில் நம் செயல்கள் அமையட்டும்.