பதிவு செய்த நாள்
31
மே
2019
11:05
புதுடில்லி: கங்கை நதி நீர் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் சிறிதும் ஏற்றதல்ல என, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.இந்தியாவின் ஜீவ நதிகளில் ஒன்றாக, கங்கை
விளங்குகிறது. கங்கையில் குளிப்பதை, ஹிந்துக்கள் மிகவும் புண்ணியமாகக்
கருதுகின்றனர்.
இந்நிலையில், கங்கை நீரின் தன்மை குறித்து, சி.பி.சி.பி., எனப்படும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில், பல இடங்களில் ஓடும் கங்கை நதி நீர், குடிப்பதற்கும், குளிப்பதற்கும் சிறிதும் ஏற்றதாக இல்லை; நதி நீரில், நோய்களை பரப்பும் கிருமிகள் அதிகம் உள்ளன.
கங்கை ஆற்றங்கரையில், 86 கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், ஏழு இடங்களில் மட்டுமே, கங்கை நீர், சுத்திகரிப்பு செய்த பின், குடிக்கும் நிலையில் உள்ளது.
இவை போக, 18 இடங்களில் மட்டுமே, நீர் குளிப்பதற்கு ஏற்ற நிலையில் உள்ளது.கங்கை நீர் மாசடைவதை தடுக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம் பல உத்தரவுகளை பிறப்பித்தும், எந்த
மாற்றமும் ஏற்படவில்லை. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கங்கை தூய்மை பணியில், மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துடன், சுற்றுச்சூழல் அமைச்சகமும் இணைந்து செயல்பட்டு வருகிறது. கங்கை நீர் தூய்மை பற்றி, மத்திய
சுற்றுச்சூழல் துறை செயலர், சி.கே.மிஸ்ரா கூறியதாவது: கங்கையை தூய்மைப்படுத்து வதற்காக, நமாமி கங்கா திட்டத்தை, நீர்வளத் துறை அமைச்சகம் செயல்படுத்துகிறது.
ஒரு காலத்தில், கங்கை கரையில், 100க்கும் அதிகமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்தன. அவை, கழிவு நீரை, கங்கையில் நேரிடையாக கலந்து வந்தன.ஆனால், நமாமி
கங்கை திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், கங்கையில், எந்த தொழிற்சாலையின் கழிவு நீரும் கலப்பதில்லை.
எனினும், கங்கை தூய்மை பணியில் திருப்தியில்லை. தூய்மைப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. வீடுகளிலிருந்து கழிவு நீரும், விவசாய கழிவு நீரும், கங்கையில்
கலப்பதை தடுக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சுற்றுச்சூழல் ஆர்வலரும்,வழக்கறிஞருமான, விக்ராந்த் டான்கட் கூறியதாவது:கங்கையை தூய்மைப்படுத்த, மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. ஆனால், அவை
போதாது. இதில், மக்கள் பங்கேற்பு முக்கியம். கங்கையை, அடுத்த ஆண்டுக்குள் தூய்மைப்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால், 2025ம் ஆண்டுக்குள், இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டாலே, பெரும் வெற்றி தான். இவ்வாறு அவர் கூறினார்.