பதிவு செய்த நாள்
01
ஜூன்
2019
11:06
உடுமலை; உடுமலை முக்கோணம் முத்தாலம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.உடுமலை அருகே முக்கோணத்தில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. கோவிலில், திருக்கல்யாண உற்சவ திருவிழா, கடந்த மாதம் 28ம் தேதி துவங்கியது. அன்று, மாலை, 5:00 மணிக்கு கிராமசாந்தி பூஜை நடந்தது.
இரவில், முனி அழைத்தல் நிகழ்ச்சியும், 29ம் தேதி, அம்மனுக்கு, திருக்கல்யாணத்துக்கு பட்டுசீர் எடுத்து வரும் வழிபாடு நடந்தது.அன்று இரவு, 10:00 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு, தொடர்ந்து, பெரிய பூலாங்கிணர் விநாயகர் கோவில் சாவடியிலிருந்து பச்ச முத்தாலம்மன் கோவிலுக்கு எழுந்தருளல், நள்ளிரவு, 1:00 மணிக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சிகளும் நடந்தன. நேற்றுமுன்தினம், மாலை, 4:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு, அலங்கார பூஜை மற்றும் மாவிளக்கு வைத்து வழிபட்டனர். காலை, 11:00 மணிக்கு பொங்கல் வைத்தும், முளைப்பாரி எடுத்தும் பக்தர்கள் வேண்டுதல் நிறைவு செய்தனர். மாலையில், பூவோடு வழிபாடு நடந்தது. இரவு, தேவராட்டம், மற்றும் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மாலையில், அம்மன் முத்தாலம்மன் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா நடந்தது.