பதிவு செய்த நாள்
04
ஜூன்
2019
03:06
சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஸ்வாமியை தரிசித்து வழிபாடு செய்ய முடியாவிட்டால் கூட, "லிங்கோத்பவ காலமாகிய இரவு 11.30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்திலாவது சிவ தரிசனம் செய்து வழிபட வேண்டும்.
சிவராத்திரி தோன்றிய தலம் திருவண்ணாமலை. அதுபோல், சிவபெருமான் லிங்க வடிவமாகத் தோன்றிய காலம்- லிங்கோற்பவ காலம் எனப்படுகிறது. சிவலிங்கம் பற்றிய உண்மையான விளக்கம், ஞான நூல்களில் தெளிவாக உள்ளது.
சம்ஸ்கிருத மொழியிலுள்ள ஸ்காந்த புராணத்தில் பார்வதி திருக்கல்யாணத்தை விவரிக்கும் பகுதியில் லிங்கத்தைப் பற்றிய மேன்மையான பல தகவல்கள் இருக்கின்றன. தமிழில் திருமந்திரத்தில் சிவலிங்கத்தைப் பற்றிய உண்மை தத்துவங்களைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் திருமூலர். லிங்க வழிபாட்டில் மூன்று வகை உண்டு. உருவ வழிபாடு, அருஉருவ வழிபாடு, அருவ வழிபாடு. இவற்றில் நாம் செய்து வருவது உருவ வழிபாடு.
அருவ வழிபாடு என்பது, உருவமற்ற பரம்பொருளைக் குறிக்கும். இதையே வேறுவிதமாக பார்த்தால், "பார்க்கும் அனைத்தையும் பரம்பொருளாகவே பார்ப்பது என்பதே பொருள். "பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே! என்று தாயுமான ஸ்வாமிகள் சொல்கிறாரே, அந்த நிலை. மகான்கள் பலர் சொல்வதும் வேதங்கள் சொல்வதும் இந்த வழிபாட்டைத்தான்.
உருவ வழிபாட்டுக்கும், உருவமில்லாத அருவ வழிபாட்டுக்கும் நடுவில் இருப்பது "அருஉருவ வழிபாடு, உருவம்
இருக்கும். ஆனால், கை- கால் முதலான அவயவங்களுடன் சேர்ந்த உருவத்தைப் போல இருக்காது; அருவமாக இருக்கும். இந்த அருஉருவ வழிபாட்டைக் குறிப்பதுதான் சிவலிங்க வழிபாடு!
சிவலிங்கத்தைத் தாங்கும் பீடத்துக்கு "ஆவுடையார் என்று பெயர். இது சக்தியின் வடிவான பூமியைக் குறிக்கும். சிவலிங்கம் ஆகாயத்தைக் குறிக்கும். இதைக் கொஞ்சம் ஆராயலாம்.
ஆகாயம் என்பது கவிழ்த்து வைத்த மரக்கால் (தானியங்களை அளக்கப் பயன்படும்) போல இருக்கிறது. ஆகாயத்தைப் பார்க்க முடிகிறதே தவிர, அதன் வடிவம் புலப்படுவதில்லை, உருவமாகத் தெரிந்தும் உருமில்லாமல் இருக்கும். இந்த ஆகாயத்தைத்தான் சிவலிங்கம் குறிக்கிறது.
அசையும் பொருள் - அசையாப் பொருள் என (நாம் உட்பட) அனைத்துமே, ஆகாயம் எனும் அந்த ஒரே கூரையின்
கீழேதான் இருக்கின்றன.
சிவலிங்க வடிவமாக இருக்கும் அந்த ஆகாயத்தை "அண்ட லிங்கம் என்று மகான்கள் சிறப்பித்துச் சொல்வார்கள்.
கோயிலில் உள்ள சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய வேண்டுமென்றால், ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வைத்துக்கொள்வோம். அதுபோல ஆகாய லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வதற்காகக் கடலில் நிறைய நீர் உள்ளது.
ஆகாய லிங்கம் மிகப் பெரியது அல்லவா? அதனால்தான் அதற்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தமும் அதிக அளவில் உள்ளது.
அபிஷேகம் முடிந்துவிட்டது. அடுத்து அர்ச்சனை அல்லது பூக்களைச் சார்த்தவேண்டும். ஆகாய லிங்கத்துக்கு எந்தப்
பூக்களைச் சார்த்துவது?
ஆகாயத்தில் இருக்கும் நட்சத்திரங்கள்தான், ஆகாய லிங்கத்துக்குப் பூமாலை.
இவ்வளவு பார்த்த பிறகும் ஒரு சந்தேகம் வருகிறது. கோயில்களில் இருக்கும் ஸ்வாமிக்கு, ஏதாவது ஒரு முறையில்
எப்படியாவது ஆடை சார்த்துகிறோம். மிகவும் உயரமான ஆஞ்சநேய வடிவங்களுக்கு எல்லாம் ஏணி வைத்தாவது ஆடை சார்த்துவதைப் பார்க்கிறோம். ஆனால், இந்த ஆகாய லிங்கத்துக்கு எப்படி அல்லது எதை ஆடையாகச் சார்த்துவது?
அதியற்புதமான ஆகாய லிங்கத்துக்குத் திசைகளே ஆடையாக உள்ளனவாம். இதுதான் சிவலிங்கத்தின் உண்மையான விளக்கம். இதை யாரோ, பக்குவப்படாதவர் சொல்லவில்லை. சிவபெருமானை நேருக்கு நேர் தரிசித்த சித்தபுருஷரான திருமூலர் சொன்ன தகவல்.
இவர் 63 நாயன்மார்களில் ஒருவராக விளங்குகிற மகான். இவரது வாழ்க்கை வரலாற்றைப் பெரியபுராணம் விரிவாகப் பேசுகிறது.
சைவத் திருமுறைகள் பன்னிரண்டில், பத்தாவது திருமுறையாக இருக்கும் "திருமந்திரம் எனும் மூவாயிரம் பாடல்கள் கொண்ட ஞானப் பொக்கிஷத்தில், சிவலிங்கத்தின் உண்மை விளக்கத்தைத் திருமூலர் அருளியிருக்கிறார்.
இதோ அவர் சொல்லும் பாடல்:
தரை உற்ற சக்தி தனி லிங்கம் விண்ணாம்
திரை பொரு நீரது மஞ்சன சாலை
வரை தவழ் மஞ்சு வான் உடுமாலை
கரை அற்ற நந்திக்குக் கலை திக்குமாமே.