லிங்க ரூபத்தில் காட்சி தரும் இறைவன் சில தலங்களில் வித்தியாசமாகவும் எழுந்தருளியுள்ளார். அந்த வகையில் கோவை - சத்தியமங்கலம் சாலையில் சுமார் 32 கிலோமீட்டர் தூரத்திலுள்ள அன்னூர் திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் அன்னீஸ்வரர் என்றும், மன்னீஸ்வரர் என்றும் போற்றப்படுகிறார்.
இங்கு சிவலிங்கம் ஒரு அகன்ற பீடத்தின்மேல் அமைந்துள்ளது. சிவலிங்கத்தில் "பெங்குவின் பறவையைப் போன்று இருபுறமும் இறக்கை வடிவம் உள்ளது. கருடன் தன் இறக்கைகளை மடக்கி அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்தில் காட்சி தருகிறது. கருடன் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், கீழே பூமியில் இருக்கும் சிறிய பொருளையும் கவனிக்கக்கூடியது. அதுபோல "யாருக்கும் தெரியாது என்றெண்ணி நாம் செய்யும் தவறுகளையும் பாவங்களையும் இறைவன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார் என்பதை இந்தத் திருவடிவம் நமக்கு உணர்த்துகிறது. அத்துடன், பாவங்களை உணர்ந்து திருந்தி, "இனி பாவங்கள் செய்ய மாட்டேன் என்று இவரது சன்னிதியில் உறுதி எடுத்துக் கொண்டால், இதுவரை செய்த பாவங்களை மன்னித்து விடுவதால், இத்தல இறைவன் மன்னீஸ்வரர் என்று போற்றப்படுகிறார்.
பொதுவாக பெரும்பாலும் சிவன்கோயில்களில் லிங்கம் கிழக்கு நோக்கியே காட்சி தரும். ஆனால், இங்கு மேற்கு நோக்கி உள்ளது. அம்பாள் அருந்தவச் செல்வி இத்தேவியை வழிபட திருமணத்தடைகள் மட்டுமின்றி ராகு - கேது தோஷங்கள் இருந்ததாலும் விலகும்.
சுமங்கலிகள், பிரதோஷ நாட்களில் விரதம் மேற்கொண்டு சந்தனாபிஷேகம் செய்து வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். குடும்பத்தில் தம்பதிக்குள் ஒற்றுமை நிலவும் என்று தலபுராணம் கூறுகிறது. வேடன் ஒருவன், மரவள்ளிக்கிழங்கை பூமியிலிருந்து அகழும்பொழுது, எந்தவித காயங்களுமின்றி பூமியிலிருந்து வெளிப்பட்ட லிங்கம் இதுவென்று வரலாறு கூறுகிறது.