பதிவு செய்த நாள்
04
ஜூன்
2019
03:06
அரச மரத்துக்கு அறிவை வளர்க்கும் சக்தி அதிகம். இதன் அடியில் அமர்ந்தாலேயே மனம் தெளிவு அடையும். இதன் அடியில் அமர்ந்து மந்திரங்களை ஜெபம் செய்தாலோ, தெய்வ சம்பந்தமான ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்தாலோ, நிறைவான பயனை அடையலாம். அஹிம்சையைப் போதித்த புத்தர் இந்த அரச (போதி) மரத்தடியில் தவம் செய்துதான் ஞானியாக ஆனார். “வ்ருக்ஷாணாமஹம் அஸ்வத்த ”: “மரங்களுள் நான் அரச மரமாக இருக்கிறேன்” என்று கண்ணபரமாத்மா கீதையில் கூறுகிறார். மேலும், அரச மரத்தின் அடிப்பகுதியில் பிரம்ம தேவனும், நுனிப் பகுதியில் பரமசிவனும், நடுப்பகுதியில் மஹா விஷ்ணுவும் வாசம் செய்கிறார்கள். ஆகவேதான் மும்மூர்த்திகள் வடிவமான அரச மரத்தை பூஜைகள் செய்வதும், பிரதட்சணம் செய்வதும், வணங்குவதும் வழக்கமாக உள்ளது. ‘துன்பங்கள் ஏற்படுவதற்குக் காரணமான பாபங்களைப் போக்கி நல்ல அறிவையும் பெற்றுத் தரும்’ என்கிறது சாஸ்திரம்.
சூரிய உதயமாகும் நேரம் முதல் சுமார் 10.40 மணி வரையில், சூரியனின் கிரணங்கள் அரச மரத்தில் விழுவதால், அதுசமயம் அரச மரத்தில் இருந்து வெளிவரும் காற்று நமக்கும், நமது உடலுக்கும் நன்மையை அளிக்கும். எனவே காலை சுமார் 10.40 மணிக்குள் அரச மரத்தை பூஜைகள், பிரதட்சணம், நமஸ்காரம் போன்ற வழிபாடுகளைச் செய்ய வேண்டுமென்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது. மற்ற நாட்களைவிட சனிக்கிழமை அன்று காலை நேரத்தில் அரச மரத்திலிருந்து வெளிவரும் சக்தி அதிகமாகக் காணப்படும் என்பதால், சனிக்கிழமைகளில் அரசமரத்தின் அடியில் சிறிது நேரம் அமர்ந்திருப்பதும், அரசமரத்தை வலம் வருவதும் மிகவும் நன்மையைத் தரும். குறிப்பாகப் பல நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களின் (கர்ப்ப பையில் ஏற்பட்ட) தோஷத்தைப் போக்கி குழந்தை பாக்கியத்தைத் தர, இந்த வழிபாடு மிகவும் சுலபமானது.
கடுமையான நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை சுமார் 8.30 மணிக்குள், உடல் மற்றும் உள்ள சுத்தியுடன் -பக்தியுடன் அரசமரத்தை 108 அல்லது 54 அல்லது 12 முறை பிரதட்சணம் செய்யவேண்டும். அத்துடன் அரச மரத்தில் தனது உடலின் அனைத்து அங்கங்களும் படுமாறு, இரண்டு கைகளாலும் இறுக்கி அணைத்துக் கொள்ள வேண்டும். இதனால் தீராத நோய் தீரும். உடல் மற்றும் உள்ளம் வைரம்போல் நல்ல வலிமைபெறும். இது நல்ல பரிகாரமாகும். ஆனால், சனிக்கிழமைகளைத் தவிர, மற்ற நாட்களில் அரசமரத்தை பூஜைகள், பிரதக்ஷிணம், நமஸ்காரம், செய்யலாமே தவிர, அரச மரத்தைக் கையால் தொடக்கூடாது. மேலும் நண்பகல், மாலை, இரவு போன்ற நேரங்களைத் தவிர்த்து, காலை சுமார் 10.40 மணிக்கு முன்பாக அரச மரத்தை வழிபடலாம்.