பதிவு செய்த நாள்
04
ஜூன்
2019
03:06
நம்மாழ்வாரின் அவதாரத் தலமான ஆழ்வார் திருநகரி அருகில் அமைந்துள்ள நவதிருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூரில் அவதரித்தவர் மதுரகவியாழ்வார். நம்மாழ்வாருக்கு முன்பாகவே அவத ரித்தவர் மதுரகவியாழ்வார். இவர் சிறந்த கல்விமானாகவும், திருமாலடியாராகவும் விளங்கியவர். நம்மாழ்வாரின் புகழ் அறிந்து அவரையே தமக்குக் குருவாக ஏற்றுக் கொண்டு அவருக்கே தொண்டு செய்து கொண்டு அவரின் உபதேசங்களைப் பட்டோலைப் படுத்தினர். நம்மாழ்வார் தமது 32 வது வயதில் இறைவனுடைய மலரடி அடைய, மதுரகவியார் அவருக்குத் திருக்கோயில் கட்டி வழிபட ஆசைப்பட்டார். இவர் நம்மாழ்வாரை வேண்ட தாமிரபரணி நீரைக் காய்ச்சினால் தனது திருவுரு’வம் கிடைக்கும் என்றும் நம்மாழ்வார் அருளி அதன்படி மதுரகவிகள் செய்ய அஞ்சலி ஹஸ்தத்துடன் கூடிய திருவுருவம் ஒன்று கிடைத்தது. அந்தத் திருவுருவம் நம்மாழ்வாரைப்போல் இல்லை. ஆகையால் ஆழ்வாரை வேண்டிட நம்மாழ்வார் தற்போது கிடைத்துள்ள விக்ரகம் கலியில் பிற்காலத்தில் தோன்றப்போகும் ஓர் மஹான் விக்ரகம் என்றும் இதுவே ராமானுஜரின் “பவிஷ்ய தாசார்ய ” திருமேனியாகும் என்றார். ஆசார்யனாக அவதரித்துக் கலியின் கொடுமையைத் தீர்ப்பார் என்றும் அருளினார்.
சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த ஸ்வாமி நம்மாழ்வார் ராமானுஜரின் வருங் கால அவதாரத்தைக் குறிப்பால் உணர்த்தியதற்கு இன்றும் நம்மாழ்வாரின் வாழ்விடமான ஆழ்வார் திருநகரி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பவிஷ்யதாசார்ய விக்ரஹத்திருமேனியே ஸாக்ஷி.
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச்சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றுமில்லை
கலியும் கெடும் கண்டு கொண்மின் கடல்
வண்ணங்கள் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசைபாடி ஆடியுழி தரக்கண்டோம்.
திருவாய்மொழி 5-2-1
தொடக்கத்தில் ஆதிசேஷனாகவும், இராமாவதாரத்தில் இலக்குவனனாகவும், கிருஷ்ணாவதாரத்தில் பலராமனாகவும் இறுதியில் கலியுகத்தில் மக்களை உய்விக்க வந்த மகானான ராமானுஜர் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூரில் ஆசூரி கேசவருக்கும் காந்திமதி தேவிக்கும் சுக்ல பக்ஷ பஞ்சமி திருவாதிரை நட்சத்திரத்தில் சித்திரை மாதம் வியாழக்கிழமை அவதாரம் செய்தார். தாய் மாமாவாகிய பெரிய திருமலை நம்பிகள் குழந்தையின் தெய்வீகப்பொலிவு கண்டு “இளையாழ்வான்” என்று பெயர் சூட்டினார். மதுராந்தகத்தில் பஞ்ச சமஸ்காரம் செய்யும்போது ஆசாரியரான பெரிய நம்பியால் “ராமானுஜன்” என்ற பெயரும், காஞ்சி வரதராஜரால் “எதிராஜர்” என்றும் திருவரங்கத்து நம்பெருமாளால் “உடையவர்” என்றும் திருமலை வேங்கடேசனால் “தேசிகேந்திரன்” என்றும் காஷ்மீரத்து சாரதா பீடசரஸ்வதியால் “ஸ்ரீபாஷ்யகாரர்” என்றும் பெரிய நம்பிகளால் “திருப்பாவை ஜீயர்” என்றும் திருக்கோட்டியூர் நம்பிகளால் “எம்பெருமானார்” என்றும் ஆண்டாளால் “நம் கோயிலண்ணன்” எனவும், திருமலையாண்டானால் “சடகோபன்” எனவும், திருவரங்கப்பெருமான் அரையரால் “லட்சுமண முனி” எனவும் இளையாழ்வார் போற்றப் பெற்றார்.
இராமானுஜருக்கு ஐந்து ஆசிரியர்கள்:
1. பெரிய நம்பி - பஞ்சஸம்ஸ்காரம் அருளியவர்
2. திருக்கோட்டியூர் நம்பி - ரஹஸ்யார்த் தங்கள் அருளினார்.
3. திருமாலை ஆண்டான் - திருவாய்மொழிப் பொருள் உபதேசித்தார்.
4. பெரிய திருமலை நம்பி - ஸ்ரீமத் ராமாயணார்த்தங்கள்.
5. ஆழ்வார் திருவரங்கத்து பெருமாளரையர் - திவ்யபிரபந்த ஸ்தோத்திரங்கள்.
நவரத்னம் போல் ஒன்பது நூல்களை உடையவர் அருளிச் செய்துள்ளார்:
1. ஸ்ரீபாஷ்யம், 2. வேதாந்த தீபம், 3. வேதாந்த ஸாரம், 4. வேதார்த்த ஸங்க்ரஹம், 5. கீதா பாஷ்யம், 6. சரணாகதி கத்யம், 7. ஸ்ரீரங்க கத்யம் 8. வைகுண்ட கத்யம், 9. நித்யம் முதலியன.
“காரேய் கருணை இராமானுச ” என்று திருவரங் கத்தமுதனார் தம் இராமானுஜ நூற்றந்தாதி 25ல் கூறியபடி இவரின் கருணைக்கு அளவே கிடையாது. தமக்கு உணவில் விஷம் கலந்த கோயில் நிர்வாகியையும் மன்னித்தார். தனக்கு ஆசாரிய ரான திருக்கோட்டியூர் நம்பி மூலம் கிடைத்த மந்திரார்தத்தை நீர் யாருக்கும் கூறக் கூடாது. மீறிக் கூறினால் உமக்கு நரகம் கிடைக்கும் என்று தெரிந்தும் தனக்கு நரகம் கிடைத்தாலும் மக்கள் எல்லோரும் நலம் பெற, பிறவித் துயரில் தவிக்கும் ஆத்மாக்கள் உய்யும் வண்ணம் எல்லோருக்கும் மந்திரத்தின் சீரிய பொருளை அருளினார். “தாம் உகந்த திருமேனி” யாக ஸ்ரீபெரும்பூதூரிலும், “தமர் உகந்த திருமேனி” யாகத் திருநாராயணபுரத்திலும் “தானான திருமேனி” யாகத் திருவரங்கத்திலும், நமக்காக அருள்புரியக் காத்திருக்கும் உடையவரை சேவித்து அருள் பெறுவோம்.
வைணவ உலகம் பின்பற்றும் உடையவரின் ஆறுகட்டளைகளாவன:
1. ஸ்ரீபாஷ்யத்தை வாசித்தாலும்
2. திவ்ய பிரபந்தங்களை ஓதுவித்தலும்
3. திவ்ய தேசங்களில் அழுது படி சாத்த உதவுவதும்
4. திருநாராயண புரத்தில் ஒரு குடிசையாவது கட்டி வாழ்வதும்
5. துவயத்தை அர்த்தத்துடனே அநுஸந்தித் திருப்பது
6. ஒரு பாகவதன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பதும் இவற்றில் முடிந்ததைச் செய்து வாழ இராமானுஜரின் ஆயிரத்து ஒன்றாவது ஆண்டில் முடிவெடுப்போம்.
“மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரை ” ஆழ்வார்களின் அடியொற்றி அனைத்துலகும் துய்க்கும் வண்ணம் ஆக்கி வைத்த ஆசார்ய குலதிலகர் யதிராஜரின் தாள் பணிவோம்.
சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
திருவரையில் சார்த்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்யவடி வெப்பொழுதும் வாழி
இலங்கிய முந்நூல் வாழி இணைத்தோள்கள் வாழி
சோராத துய்ய செய்ய முகச்சோதி வாழி
தூ முறுவல் வாழி துணைமலர்க்கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிது இருப்போடு எழில் ஞான முத்திரை வாழியவே.
-மணவாள மாமுனிகள்.
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி.