பதிவு செய்த நாள்
05
ஜூன்
2019
12:06
மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனத்திற்கு முதியோர், குழந்தைகளுக்கு தனி வரிசையை ஏற்படுத்த தாக்கலான வழக்கில், இவ்விவகாரம் தொடர்பாக கோயில் இணை கமிஷனர் 2018 ல் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதை கண்டிப்பான முறையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
காரைக்குடி வழக்கறிஞர் மணிகண்டன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கட்டண தரிசன முறையில் பக்தர்கள் பணம் செலுத்தி தனி வரிசையில் செல்கின்றனர். கட்டணம் செலுத்த இயலாதோர் பொது தரிசனத்தில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டும். இதில் முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.மே 17 ல் கோயிலுக்கு வந்த ஒரு பெண் மாரடைப்பால் இறந்தார். அங்கு மருத்துவ மற்றும் ஆம்புலன்ஸ் வசதி இல்லை. முதியோர், கர்ப்பிணி, குழந்தைகளுக்கு சிறப்பு தரிசன வரிசையை ஏற்படுத்தக்கோரி மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மணிகண்டன் மனு செய்தார்.நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி அமர்வு உத்தரவு: இவ்விவகாரம் தொடர்பாக கோயில் இணை கமிஷனர் 2018 ல் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், முதியவர், கர்ப்பிணிகளை விரைவாக தரிசனம் செய்ய வைக்க ஊழியர்கள் உதவ வேண்டும். நீண்ட நேரம் காத்திருக்க வைக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது. அதை கண்டிப்பான முறையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். முதியோர், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளை நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதை இணை கமிஷனர் அவ்வப்போது ஆய்வு செய்து, கண்காணிக்க வேண்டும். வழக்கை பைசல் செய்கிறோம் என்றனர்.