சூரியன், மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் ஆனி மாதமாகும். சூரியனின் வடதிசை நோக்கிப் பயணிக்கும் உத்தராயனத்தின் கடைசி மாதமாக ஆனி மாதம் அமைகிறது. தேவர்களுக்குரிய பகல்பொழுதின் இறுதிப்பகுதியாக -மாலைநேரப் பொழுதாக அமைவதே இந்த மாதம். நம் நாட்டில் நீண்ட பகல்பொழுதைக் கொண்ட மாதமிது. ஜேஷ்டமாதம் என அழைக்கப்படும் ஆனி மாதத்தில், கேட்டை நட்சத்திரத்தில் எல்லா கோயில்களிலும் ஜேஷ்டாபிஷேகம் எனும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதில் கலந்துகொண்டு தரிசித்தால் இறையருளைப் பூரணமாகப் பெறலாம் என்பது நம்பிக்கை.