பதிவு செய்த நாள்
14
ஜூன்
2019
01:06
செங்கல்பட்டு:அனுமந்தபுரம் அகோர வீரபத்ரர் கோவிலில், ராஜகோபுர மஹாகும்பாபிஷேகம், இன்று (ஜூன்., 14ல்) நடைபெறுகிறது.
செங்கல்பட்டு அடுத்த, அனுமந்தபுரம் வீரபத்ரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு, ராஜகோபுரம் கட்டித்தர வேண்டும் என, அரசிடம், நீண்டகாலமாக பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, அரசு நிதி மற்றும் ஆன்மிக பக்தர், ரவிசந்தின் என்பவரின் நன்கொடை மூலம், கோவில் ராஜகோபுர திருப்பணிகள் துவங்கி, சில நாட்களுக்கு முன் முடிந்தன.தொடர்ந்து, 10ம் தேதி, கணபதி பூஜையுடன், கும்பாபிஷேக விழா துவங்கியது. இன்று (ஜூன்., 14ல்) காலை, 9:00 மணிக்கு, ராஜகோபுரம், அகோர வீரபத்ரர் மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும், புனராவர்த்தன அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
இவ்விழா ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலைத் துறை இணை ஆணையர், செந்தில்வேலன், செயல் அலுவலர், சிவசண்முகபொன்மணி, பரம்பரை அறங்காவலர் காமேஸ்வரன், செந்தில்குமார் சிவாச் சாரியார் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், கிராம பொதுமக்கள் செய்கின்றனர்.அகோர வீரபத்ரர் கோவிலில், சுவாமிக்கு, வெற்றிலை மாலை சாற்றப்படுவது குறித்து, ஊர் பெரியோர் கூறியதாவது:சிவன், ருத்ர தாண்டவம் ஆடும்போது அவரிடமிருந்து வெளிப்பட்ட, வியர்வை நீர் கொதித்து, அதிலிருந்து அகோர வீரபத்ரர் தோன்றினார்.
இந்நிலையில், சிவனுக்கு தர வேண்டிய அவிர்பாகத்தை தராமல், தட்சன் யாகம் நடத்தினார். இதுகுறித்து வீரபத்ரர் கேட்க, தட்சன் அப்போதும் மறுக்கவே, அவரின் தலையை, வீரபத்ரர் வெட்டினார். பின், தன் கோபம் தணிய, வெற்றிலை தோட்டத்தில் அமர்ந்து சாந்தரூபியானார். அதுபோல், மன அமைதிக் காவே, பக்தர்கள் வெற்றிலை மாலை சாற்றுகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.