பதிவு செய்த நாள்
19
மார்
2012
10:03
ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோவில் கோபுர மின் விளக்குகளை இயக்க, தனி சூரியசக்தி மின்நிலையம் அமைக்கப்பட உள்ளது.இந்தியாவிலுள்ள முக்கியமான சுற்றுலா தலங்களில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க, மத்திய அரசு உத்தரவிட்டு, மானியம் ஒதுக்கி உள்ளது.தமிழகத்தில் இந்தத் திட்டம், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.திட்டத்தின் ஒரு பணியாக, ராமநாத சுவாமி கோவில் கோபுரங்கள், மாடங்களில் உள்ள வண்ண விளக்குகளுக்கு, சூரியசக்தி மின்சார இணைப்பு தர முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ராமநாத சுவாமி கோவில் வளாகத்தில், 20 கிலோவாட் திறன் கொண்ட சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்படும். அங்குள்ள சிறிய விளக்குகள் அகற்றப்பட்டு, பிரகாசமான ஐந்து விளக்குகள் பொருத்தப்படும்.சூரியசக்தி கிடைக்காத நேரத்தில், மின்வாரிய இணைப்பில் விளக்குகள் எரியும். இன்னும் இரண்டு மாதத்திற்குள், அங்கு சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.