பதிவு செய்த நாள்
19
மார்
2012
10:03
திருப்பூர்:திருப்பூர் நலனுக்காக, சிருங்கேரி சுவாமிகள் தலைமையில் வேத விற்பன்னர்கள் மகா ருத்ர யாகம் நடத்தினர்.சிருங்கேரி பீடத்தின் 36வது பீடாதிபதி பாரதி தீர்த்த சுவாமிகள் மூன்று நாள் விஜயமாக நேற்று முன்தினம் திருப்பூர் வருகை தந்தார். திருப்பூர் பக்தர்கள் சார்பில் அளிக்கப்பட்ட பூரண கும்ப வரவேற்பு, வாழ்த்து மடல் மற்றும் காணிக்கைளை பெற்றுக்கொண்ட அவர், அருளுரை வழங்கினார். தொடர்ந்து, சந்த்ரமவுலீஸ்வரர், சாரதாம்பாள் பூஜை நடத்தினார். திருப்பூர் விஜயத்தின் இரண்டாம் நாளான நேற்று, மகா ருத்ர யாக சங்கல்பம் நடந்தது. ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் இந்த யாக சங்கல்பத்தை சுவாமிகள் துவக்கி வைத்தார். யஜூர் வேதத்தில் பரமசிவனை துதித்து, அதன் மத்தியில் உள்ள பகுதி ஸ்ரீருத்ரம் என்ற மந்திரங்கள். இந்த மந்திரங்கள், சிவனுக்கு அபிஷேகம் செய்யும்போது ஓதப்படும். அம்மந்திரப் பகுதியின் மையத்தில், "நம சிவாய என்ற பஞ்சாட்சரம் அமைந்துள்ளது. இதன் மூலம் ஸ்ரீருத்ரத்தின் மகிமையும், பஞ்சாட்சரத்தின் மகிமையும் ஒருசேர தெரியவருகிறது. மனிதர்கள் தங்கள் கஷ்டங்கள் தீரவும், வேண்டிய வரங்கள் கிடைக்கவும், ஸ்ரீருத்ர பிரார்த்தனையை யாகமாக செய்வது வழக்கம். இதில், ஸ்ரீருத்ர மந்திரத்தை, 121 முறை ஜபம் செய்து கடைசி நாளில், 12 முறை ஹோமம் செய்ய வேண்டும். நேற்று காலை துவங்கிய இந்த ஹோமம் நாளை மறுநாள் பூர்ணாஹுதியுடன் நிறைவடைகிறது. இந்த யாகத்தை பல பகுதிகளில் இருந்தும் வந்துள்ள வேத விற்பன்னர்கள், 50 பேர் மேற்கொண்டுள்ளனர்.திருப்பூர் தற்போது சந்தித்து வரும் அனைத்து தொழில்களிலும் உள்ள பிரச்னை மற்றும் பொருளாதார கஷ்டங்கள் நீங்கி, மக்கள் மகிழ்ச்சியாக வாழவும், நற்சிந்தனை பெற்றும், அனைத்து நல்ல காரியங்கள் மென்மேலும் தழைத்தோங்கவும் சிறப்பு பிரார்த்தனையுடன் கூடிய சங்கல்பத்துடன் இந்த யாகம் நடத்தப்படுகிறது. யாக சங்கல்பத்தை தொடர்ந்து ருத்ர ஜபம் நடந்தது. வேத விற்பன்னர்களுடன் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். மண்டப வளாகத்தில் சாரதாம்பாள் சந்த்ரமவுலீஸ்வரர் திருவுருவங்கள் அமைக்கப்பட்டு, அர்ச்சகரால் தொடர்ந்து பூஜை நடத்தப்பட்டது. மண்டபத்தில் ஆசனத்தில் அமர்ந்து காலை முதல் பிற்பகல் வரை சுவாமிகள் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து, ஆசி வழங்கினார். நீண்ட வரிசையில் நின்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமிகளை தரிசனம் செய்து, பிரசாதம் பெற்றுச் சென்றனர்.திருப்பூர் விஷ்ணு சகஸ்ரநாம மண்டலி குழுவினர் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்தனர். இவற்றிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து துக்காராம் கணபதி மகராஜ் குழுவினர் நாமசங்கீர்த்தனம் செய்தனர். சுவாமிகள் வழக்கமாக நடத்தும் சாரத சந்த்ரமவுலீஸ்வரர் பூஜையை பக்தர்கள் முன்னிலையில் நடத்தினார். ஆதிசங்கரர் வழங்கிய ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.