பதிவு செய்த நாள்
19
மார்
2012
11:03
ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் பண்டிகையையொட்டி, பழுதான இரும்பு தடுப்பு வேலிகளை சீரமைக்கும் பணி நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் பெரிய மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பர். இந்தாண்டு இத்தேர்த்திருவிழா மார்ச் 20ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. முன்னதாக, பெரிய மாரியம்மன் கோவில் முன், பிரம்மாண்டமான பந்தல் அமைக்கும் பணி நடந்தது. விழாவில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களும் நிழலில் அம்மனை தரிசிக்கும் வகையில், பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. நேற்று, பழுதான இரும்பு தடுப்பு வேலிகளை சீரமைக்கும் பணி நடந்தது. பந்தலில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி இன்று துவங்கும் என கோவில் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், ""பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பர். அனைத்து பக்தர்களும், நிழலில், வரிசையில் நின்று அம்மனை தரிசிக்கும் வகையில், பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) பழுதாக இருந்த இரும்பு தடுப்புவேலிகள் சீரமைக்கும் பணி நடந்தது. நாளை (இன்று) பந்தலில் தடுப்புவேலிகள் அமைக்கும் பணிகள் நடக்கிறது. மார்ச் 20ம் தேதி இரவு 9 மணிக்கு பூச்சாட்டுடன், தேர்த்திருவிழா துவங்குகிறது. 24ம் தேதி இரவு 8.30க்கு பட்டாளம்மனுக்கு அபிஷேகம், இரவு 10.30க்கு கம்பம் நடுதல் நடக்கிறது. 29ம் தேதி மாலை 5 மணிக்கு கொடியேற்றம், ஏப்ரல் 3ம் தேதி அதிகாலை 5.30க்கு குண்டம், 9 மணிக்கு பெரிய மாரியம்மன் திருவீதி உலா, 4ம் தேதி காலை 9.30க்கு பொங்கல் வைத்தல், மாலை 4 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நடக்கிறது. ஏப்ரல் 7ம் தேதி மாலை 3 மணிக்கு கம்பம் எடுத்தல், மஞ்சள் நீர் விழா நடக்கிறது. 8ம் தேதி காலை மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. உதவி ஆணையர் தனபாலன் உத்தரவின் பேரில், செயல் அலுவலர் சுப்பிரமணியன் ஏற்பாடுகளை செய்து வருகிறார், என்றனர்.