பாரதியார் காட்டிய வழியில் பக்தி செய்தால் நாமும் சித்தராகலாம். அவரது தெய்வீகப் பாடல்களின் அர்த்தங்கள் ஆயிரம்... ஆயிரம்... திரும்பத் திரும்ப அவற்றைப் பயிலும் போது அதை உணர முடியும். மகாகவி சொல்கிறார். எங்கள் கணபதி நமது இல்லத்தை, பரம்பரையாக வாழ வைப்பார்... உறுதியாய் நம்புங்கள். நான் சொல்கின்ற மூன்றை மட்டும் செய்தால், நாம் மேலே சொன்னது நிச்சயம் நடக்கும் என்கிறார். அது என்ன மூன்று செயல்கள்? முதலில் நமக்கு கடவுளால் என்ன தொழில் வழங்கப் பட்டிருக்கிறதோ அதைச் செம்மையாகச் செய்ய வேண்டும். ’எனக்குத் தொழில் கவிதை என பராசக்தி பணித்து உள்ளாள்’ என்கிறார் பாரதியார். அதனை செவ்வனே செய்கின்றேன். அதே போல உங்களுக்கு எந்தத் தொழிலோ அதனை நீங்கள் நூறு சதவிகிதம் செம்மையாக செய்யுங்கள். தனக்கு மேலே உள்ள அதிகாரிக்கு பயந்து அல்ல... கடவுளுக்கு பயந்து... அவனது கண்காணிப்பு கேமரா ஒவ்வொருவர் மீதும் உள்ளது. எனவே பணியை நிறைவாகச் செய்வோம். இரண்டாவது நாம் செய்யும் பணியின் மூலம் நாட்டிற்கு நன்மை விளைகிறதா? என கேட்டுப் பார்ப்போம். எந்தையும், தாயும் மகிழ்ந்து குலாவி இருந்த தேசம்... இதனை “வந்தே மாதரம்” என்று வாழ்த்தி வாழச் செய்ய வேண்டும். நம்மால் இயன்ற வரை இந்த நாடு நலமுற ஏதேனும் நன்மை செய்தாக வேண்டும். அது கடுகளவு இருந்தால் கூடப் போதும்.
சாலையில் செல்லும் போது கீழே கிடக்கும் கல்லையோ, முள்ளையோ கவுரவம் பார்க்காமல் அப்புறப்படுத்துவது. காலை விடியலுக்குப் பின்னும் எரியும் மின்விளக்குகளை நிறுத்துவது, அலுவலகங்களில் யாரும் இல்லாத போது ஓடும் மின் விசிறிகளை நிறுத்துவது, சாலைக்குழாய்களில் குடங்கள் நிறைந்து வழிந்தோடும் குழாயை நிறுத்துவது போன்ற சின்னச் சின்னச் செயல்களெல்லாம் கூட நாட்டிற்காக உழைப்பது தான். மூன்றாவது இமைப்பொழுதும் சோர்வில்லாமல் இருப்பது... இமைப்பொழுது என்பது மனிதருக்கு, மனிதர் வேறுபடும். பக்திக்கு முதல் எதிரி சோம்பேறித்தனம். சுறுசுறுப்பாக உள்ளவர்களிடத்திலே தான் மகாலட்சுமி தங்குவாள். எனவே நமக்கு விதிக்கப்பட்ட செயலைச் சுறுசுறுப்புடன் தாமதமின்றி செய்ய வேண்டும். அத்தகையவர்களைத் தான் உலகம் விரும்பும். நான் எனது பணியைச் செய்யாமல் கோயில், கோயில் என சுற்றுவதோ, பக்தன் என்ற பெயரில் கடமை தவறுவதோ கூடாது.
மூவுலகிலும் எனக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் ஏதுமில்லை என்றாலும், ’நான் கடமை ஆற்றிக் கொண்டே இருக்கின்றேன்’ என்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். எனவே இமைப் பொழுதும் சோர்வில்லாமல் செயல்களைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். இம்மூன்றையும் தர்மத்தின் வழிநின்று முறையாகச் செய்தால் அம்பிகைக்குப் பிரியமான கணபதி நம் குடியை வாழ வைப்பான் என உறுதிபடச் சொல்கிறார் மகாகவி. அவர் காட்டும் வழியில் சென்று கணபதி அருளால் உலகை நல்ல முறையில் வெல்வோம் வாரீர். நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல் உமைக்கினிய மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான் சிந்தையே இம்மூன்றும் செய்.