பதிவு செய்த நாள்
02
ஜூலை
2019
01:07
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவில் வளாகத்தில், பக்தர்கள் பாதத்தை வெப்பம் தாக்காமல் இருக்க, கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில், தென் திருப்பதி என்றழைக்கப்படும் பாலமலை ரங்கநாதர் கோவில் உள்ளது.
இங்கு முன் மண்டபம், புதிய கொடிமரம், தன்வந்திரி, தும்பிக்கையாழ்வார், காளிதாஸ் சுவாமிகள், அனுமன், ராமானுஜர் கோவில்கள் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா கடந்த பிப்., 10ம் தேதி நடந்தது. கோவில் வளாகத்தில் முன் மண்டபம், கோவிலுக்குள் உள்ள தும்பிக்கையாழ்வார், காளிதாஸ் சுவாமிகள், ராமானுஜர் கோவில்களை சுற்றியும் கிரனைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதி திறந்த வெளியாக இருப்பதால், காலை, 8.00 மணியின் போது சூரியனின் வெப்பக்கதிர்களால் கற்கள் மிகவும் சூடாகி விடுகின்றன.இதனால் பக்தர்கள் கோவிலை சுற்றி வர முடியாமல் திணறினர். காலை, 11.00 மணிக்கு பிறகு கோவிலுக்கு வரும் பலர் தும்பிக்கையாழ்வார், காளிதாஸ் சுவாமிகள், ராமானுஜர் கோவில்களை மண்டபத்தில் இருந்தே தரிசித்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டது.
இதை தவிர்க்க, கோவில் நிர்வாகம், இக்கோவில்கள் உள்ள பகுதியில், தரையில் பதிக்கப்பட்டுள்ள கிரனைட் கற்கள் மீது சிறப்பு வகையான பெயின்டை வர்ணமாக தீட்டியுள்ளனர்.இதனால், கற்கள் மீது வெப்பம் குறைந்து பக்தர்கள் காலாற நடக்க முடிகிறது.இது குறித்து, பக்தர்கள் கூறுகையில், தற்போது பிரதான கோவிலின் சுற்றுப்பகுதியில் மட்டும் வர்ணம் பூசப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரகாரத்தின் சுற்று வட்டப்பாதையிலும் சிறப்பு வகை பெயின்ட்டை பூச, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.