விரிந்த ஜடாமுடியுடன் நடராஜரை கோயிலில் பார்த்திருப்பீர்கள். ஆடும் அவருக்கு முடி விரிந்து கிடப்பது இயல்பு. ஆடி முடித்த நிலையில், ஒடுங்கிய ஜடாமுடி கொண்ட நடராஜர், கோவை அருகிலுள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் காட்சி தருகிறார். இவரை தரிசித்தால் மனஅமைதியுடன், நீண்ட ஆயுளும் கிடைக்கும். பிரம்மாவைப் போலவே, தானும் படைப்புத்தொழில் நடத்த விரும்பியது தேவலோகப் பசு காமதேனு. அதற்காக சிவலிங்கத்தின் மீது தினமும் பால் சொரிந்து வழிபட்டது. காலப்போக்கில் சிவலிங்கம் இருந்த இடம் புற்றால் மூடப்பட்டது. ஒருநாள் அங்கு காமதேனுவின் கன்றுக்குட்டியான ’பட்டி’ விளையாடியது. அதன் கால் இடறி புற்று உடைந்தது. பிள்ளையால் ஏற்பட்ட தவறுக்காக காமதேனு வருந்தியது. “குழந்தைத் தனம் கொண்ட பட்டியின் செயலை பொறுத்துக் கொண்டேன். அதன் குளம்படி என் தலைமீது பட்டதில் மகிழ்ச்சி கொள்கிறேன். வரத்தை கரூரில் தருகிறேன்” என்றார் சிவன். இங்குள்ள நடராஜர் நடனமாடி முடித்த நிலையில் ஒடுங்கிய ஜடாமுடியுடன் உள்ளார். குறும்பு பார்வை, மேடான கதுப்பு கன்னத்துடன் இருக்கும் இவர் சிவகாமி அம்மனுடன் இருக்கிறார். இங்குள்ள ’பிறவாப்புளி’ என்னும் புளியமரத்தில் விதைகள் முளைப்பதில்லை. இங்கு இருக்கும் பைரவரை வணங்கினால் இருதய நோய், கிரகதோஷம் தீரும். மகா மண்டபத்தில் மரத்தால் ஆன ஆஞ்சநேயர் சிலை உள்ளது.
எப்படி செல்வது : கோயம்புத்தூர்- – சிறுவாணி சாலையில் 8 கி.மீ., தொடர்புக்கு : 0422 – 260 7991.