பதிவு செய்த நாள்
02
ஜூலை
2019
05:07
உங்களது குறிக்கோள் எவ்வளவு கடினம் என்றாலும், அதை ஒருவர் மனசு வைத்தால் மட்டுமே முடியும். மாறாக குறிக்கோள் எளிதாக இருந்தாலும், அவர் மனம் வைக்காவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. அவர் யார் என அறிய ஆவலாக இருக்கிறீர்களா? இப்போதே அறிமுகப்படுத்துகிறேன். வாருங்கள் என்னோடு! எழுந்து கண்ணாடி முன்னால் போய் நில்லுங்கள். நான் சொன்ன நபர் காட்சியளிப்பார்! ஆமாம், நீங்கள் தான் அந்த நபர்! மனதில் என்னதான் உயர்ந்த குறிக்கோள் இருந்தாலும், ஈடுபாடு இல்லாவிட்டால் அடைய முடியாது. இதை ’பர்சனல் கமிட்மெண்ட்’ என்பார்கள். மனதின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் உடலும் இயங்க வேண்டும். இந்த மனம், உடல் நம்முடையது தானே? அப்படியிருக்க எப்படி நாமே நமக்கு தடையாக இருக்க முடியும் என்று தோன்றலாம். ஒரு உதாரணத்தோடு இதை பார்க்கலாம்.
நண்பர் ஒருவர், என்னை காரில் அழைத்துச் செல்ல வந்திருந்தார். விலை உயர்ந்த கார். டேங்க் நிறைய பெட்ரோல். அவரும் நல்ல ஓட்டுனர். காரை ஸ்டார்ட் செய்து புறப்பட்டார். அவர் நினைத்த அளவிற்கு வேகமாக செல்லவில்லை. சற்று யோசித்தார். ஹேண்ட் பிரேக்கை ரிலீஸ் செய்யாதது தெரிந்தது. சிரித்தவாறே அதை ரிலீஸ் செய்தார். பின்னர் சொன்னதை கேட்டது கார்! மனதின் வேகத்திற்கும் இப்படி ஏழு வகையான பிரேக் உள்ளன. அவை ஆசை, கோபம், சுயநலம், மோகம், கர்வம், பொறாமை, சோம்பல். ஹிந்து தர்மப்படி முதல் ஆறும் மனதின் எதிரிகள் என்பார்கள். ஏழாவதாக சோம்பலையும் சேர்த்துக் கொள்வோம். ஒரு உதாரணம் பார்த்தால் விஷயம் புரியும். இன்று காலையில் உங்களுக்குப் பிடித்தமான வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு செல்ல வேண்டும். அதற்காக நன்றாகத் தயார் செய்திருக்கிறீர்கள். உயர்ந்த பதவி நல்ல சம்பளம். அதற்கான தகுதிகளும் இருக்கின்றன. தேர்வை முடித்துக் கொண்டு அப்பாயிண்மெண்ட் ஆர்டரை வாங்க வேண்டியதுதான். இந்த வேலைக்காக நீங்கள் பல ஆண்டுகள் உழைத்திருக்கிறீர்கள். கடந்த இரண்டு, மூன்று நாளாகவே இதைப் பற்றி சிந்தித்திருக்கிறீர்கள். கண் விழித்த போதிலும், படுக்கையில் இருந்து உங்களால் எழுந்திருக்க முடியவில்லை. யாரோ கயிறுகளால் கட்டியிருக்கிறார்கள்! இதை மனக்கண்ணில் நினைத்துப் பாருங்கள்.
எப்படி இருக்கிறது?
விழித்தெழுந்த மனதைக் கட்டுபவை தான் ஆசை, கோபம் உள்ளிட்ட ஏழு சக்திகள். இவற்றை நாம் வெல்ல வேண்டும். இல்லாவிட்டால் குறிக்கோளை அடைய முடியாது. ’டக் அப் வார்’ என்ற ஒரு விளையாட்டை கேள்விப்பட்டிருப்பீர்கள். இரண்டு குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆளுக்கு ஒருபுறம் கயிறை பிடித்துக்கொண்டு எதிரெதிராக இழுப்பார்கள். எந்த குழுவுக்கு பலம் இருக்கிறதோ அவர்கள் பக்கம் கயிறு செல்ல அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்து விடுவர். இந்த விளையாட்டு நம் வாழ்விலும் நடக்கிறது. குறிக்கோள், உற்சாகம், சாதிக்கும் வெறி, கல்வி, திறமை, அனுபவம், உழைப்பு, ஆரோக்கியம் எல்லாம் ஒருபுறம். செயல்பட விடாமல் தடுக்கும் எதிரிகளான ஆசை, கோபம், சுயநலம், மோகம், கர்வம், பொறாமை, சோம்பல் ஆகியவை மறுபுறம். இதுவே யதார்த்தமான உண்மை. மனதை தடுக்கும் எதிரிகளை வெல்லும் உத்தியை பார்ப்போம்.
முதலில் காமம். பொருளின் மீதுள்ள தீராத ஆசை என இதற்கு பொருள் கொள்ள வேண்டும். மண்ணாசை, பெண்ணாசை பொன்னாசை என்பார்கள். அது தான் காமம்.
சிறுவன் ஒருவன் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அவனது அம்மா சத்துணவு மையத்தில் சொற்ப சம்பளத்தில் வேலை செய்தாள். குடும்பத்தில் நான்கு பிள்ளைகள். இவர்களை எப்படியாவது கரையேற்ற வேண்டும் என்ற நிலை.
தெருவில் ஒரு இட்லி கடை வைத்தாள் அம்மா. ஒரு வாளியில் இட்லிகளை எடுத்துக்கொண்டு வீடு வீடாக விற்பான் இந்த சிறுவன். அதன் பின் பள்ளிக்குப் போவான். ஒருநாள் இரவில் அம்மா தண்ணீர் மட்டும் குடிப்பதைப் பார்த்தான் அவன். அம்மாவிற்கு தண்ணீர் பிடிக்கும் போலிருக்கு என நினைத்தான். ஆனால் பின்னரே தெரிந்தது அவருக்கு சாப்பிட சோறு இல்லை என்பது. சிறுவனின் மனதிற்குள் வெறி எழுந்தது. எப்படியாவது படித்து நல்ல வேலையில் சேர்ந்து குடும்ப கஷ்டத்தைப் போக்க வேண்டும் என நினைத்தான். ஆனால் பள்ளியில் கட்டணம் கட்டாததால் வகுப்பிற்கு வெளியே நிற்க வைத்தனர். வகுப்பிற்குள் இருந்தால் தான் படிக்க முடியுமா என்ன, வெளியில் நின்றாலும் முடியும் என பாடத்தைக் கவனித்தான். சுகம் இருந்தால் தானே தூக்கம் வரும் என்று சட்டையைக் கழற்றி விட்டு வெறும் தரையில் படுத்தான். குளிர் அவனை அதிகாலை நான்கு மணிக்கே எழுப்பி விட்டது. நன்றாகப் படித்து அதிக மார்க் வாங்கினான். பிட்ஸ் பிலானியில் மேற்படிப்பு படித்து, ஐ.ஐ.எம்., கோல்கட்டாவில் எம்.பி.ஏ., படிப்பு முடித்தார். இப்போது 450 கோடி ரூபாய் வியாபாரத்துக்கு அதிபதியாகி விட்டார். உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் அதிபதியான ’புட்கிங் சரத் பாபு’ அவர்கள்!
இதற்கு காரணம் அம்மாவின் கஷ்டத்தைப் போக்க வேண்டும் என்ற எண்ணம் தானே? ஒரு ஆசிரியர் இருந்தார். பேச முடியாத, காது கேட்காத, பார்வை இல்லாத தன் மாணவி ஒருவருக்கு பாடம் சொல்லிக் கொடுத்து பெரிய நிலைக்குக் கொண்டுவர விரும்பி செய்து காட்டினார்! அவர் யார் என அறிய காத்திருங்களேன்.