பதிவு செய்த நாள்
05
ஜூலை
2019
11:07
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில், உலகப்புகழ் பெற்ற, புரி ஜெகன்னாதர் கோவில் ரத யாத்திரை நேற்று துவங்கியது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஒடிசாவின், புரி நகரில், தொன்மையான ஜெகன்னாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும், ஒன்பது நாட்கள் நடத்தப்படும் ரத யாத்திரை உலகப்புகழ் பெற்றது.இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை, நேற்று துவங்கியது. சுவாமி ஜெகன்னாதர், பாலபத்திரர் மற்றும் தேவி சுபத்ரா ஆகிய மூன்று உற்சவர் சிலைகளும், அலங்கரிக்கப்பட்ட, மூன்று பிரமாண்ட தேர்களில், வீற்றிருந்தனர்.யானைகள் அணிவகுத்து முன் செல்ல, அதன் பின், மூன்று தேர்களும் அசைந்தாடி சென்றன. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். மூன்று தேர்களுக்கு முன்பும், ஏராளமானோர் பாரம்பரிய நடனங்கள் ஆடினர்.நேற்று பிற்பகலில், ரத யாத்திரை துவங்கியது. இருப்பினும், அதிகாலையிலேயே லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். தேர்களுக்கு அருகில், இடம்பிடிக்க அலைமோதினர்.
கூட்டத்தை கட்டுப்படுத்த, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புரியில் நேற்று துவங்கிய ரத யாத்திரை, ஒன்பதாவது நாளில், கண்டிச்சா கோவிலில் நிறைவடையும். ரத யாத்திரையை முன்னிட்டு, புரி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.ஒடிசா கவர்னர், கணஷே் லால், முதல்வர், நவீன் பட்நாயக் மற்றும் அமைச்சர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, கே.எஸ்.ஜாவேரி உள்ளிட்ட வி.ஐ.பி.,க்கள், ரத யாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அமித் ஷா ஆரத்தி: குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் உள்ள ஜெகன்னாதர் கோவிலிலும், நேற்று ரத யாத்திரை நடந்தது. காலையில் நடந்த மங்கள ஆரத்தியில், மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா தன் குடும்பத்தினருடன் பங்கேற்றார். தேர் இழுக்க, லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். நேற்று இரவு, 8:30 மணிக்கு, ரத யாத்திரை நிறைவடைந்தது.
மேற்கு வங்க எம்.பி., நடனம்: மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், இஸ்கான் அமைப்பு, ஜெகன்னாதர் ரத யாத்திரையை நடத்தியது. இந்நிகழ்ச்சியில், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, மற்றும் திரிணமுல் காங்., - எம்.பி., நுஸ்ரத் ஜஹான் பங்கேற்றனர். அப்போது பேசிய, மம்தா, பங்க்ளா என்ற கோஷத்தை வலியுறுத்தினார். மேற்கு வங்கத்தின் பெயரை, பங்க்ளா என மாற்ற, மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நுஸ்ரத் ஜஹான், தேருக்கு முன், உற்சாகமாக நடனம் ஆடினார். இதை, பக்தர்கள் கைதட்டி வரவேற்றனர்.