பதிவு செய்த நாள்
05
ஜூலை
2019
11:07
காஞ்சிபுரம்: காஞ்சி அத்தி வரதரை தரிசிக்க வரும், பக்தர்களை கணக்கிட, வரதராஜ பெருமாள் கோவில், வசந்த மண்டபம் வெளியே, புதிய கருவி பொருத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், திங்கட்கிழமையன்று அத்தி வரதர் வைபவம் துவங்கியது. 40 ஆண்டுகளுக்கு பின், இந்த வைபவம் நடைபெறுவதால், அத்தி வரதரை தரிசிக்க, உள்ளூர், வெளியூர் பக்தர்கள் அன்றாடம் ஆயிரக்கணக்கில் வருகின்றனர். வைபவம் துவங்கிய நாள் முதல், தரிசனம் தொடர்பான நடைமுறைகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. முதல் நாளே, 50 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, உள்ளூர் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அனுமதியும் ரத்து செய்யப்பட்டது. காரணம், வெளியூரிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், கூட்டத்தை கட்டுப்படுத்த இது போன்ற நடவடிக்கை எடுத்ததாக, கோவில் நிர்வாகம் தெரிவிக்கிறது. இந்நிலையில், அத்தி வரதரை தரிசிக்க கோவிலிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, மூன்று நாட்களாகவே தோராயமாகவே தெரிவிக்கப்பட்டது.ஒவ்வொரு நாளும், 70 ஆயிரம் பேர், 80 ஆயிரம் பேருக்கு மேல் வருவதாக தெரிவிக்கப்பட்டது.ஆனால், துல்லியமாக பக்தர்களின் எண்ணிக்கை தெரியாமல் இருந்தது. இந்நிலையில், பக்தர்களின் வருகையை துல்லியமாக எண்ணும் கருவியை, மாவட்ட நிர்வாகம், திருச்சியில் இருந்து வரவழைத்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, அத்தி வரதர் வீற்றிருக்கும் வசந்த மண்டபம் வெளியே, இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது. வசந்த மண்டபத்திலிருந்து, வெளியே வரும் பக்தர்கள் ஒவ்வொருவரையும், இந்த கருவி எண்ணுகிறது. இதன் மூலம் துல்லியமாக பக்தர்களின் எண்ணிக்கை கணிக்கப்பட்டு வருகிறது. இந்த கருவி மூலம், 45 ஆயிரம் பக்தர்கள் நேற்று வந்ததாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நேற்றிலிருந்து, வரும், 10ம் தேதி வரை கோடை உற்சவமும், 11ல், ஆனி கருட சேவையும் நடைபெற உள்ளதால், மாலை, 5:00 மணி வரை மட்டுமே, அத்தி வரதர் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என, கோவில் நிர்வாகம் தெரிவித்தது.