பதிவு செய்த நாள்
09
ஜூலை
2019
02:07
மோகனூர்: விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. மோகனூர் அடுத்த பெரமாண்டம்பாளையம் பஞ்., ஆண்டிபாளையத்தில், செல்வ விநாயகர் கோவில் திருப்பணி, மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில், கும்பாபிஷேக த்துக்கு விழா குழுவினர் ஏற்பாடு செய்தனர். நேற்று முன்தினம் (ஜூலை., 7ல்), மகா கணபதி, மகாலட்சுமி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.
தொடர்ந்து, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்துக் கொண்டு கோவிலை அடைந்தனர். வாஸ்து சாந்தி, முதற்கால யாக வேள்வி, கோபுர கலசம் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று (ஜூலை., 8ல்) அதிகாலை, 4:30 மணிக்கு, இரண்டாம் கால யாக வேள்வி, கடம் புறப்பாடு நடந்தது. காலை, 6:30 மணிக்கு, கோபுர கலசத்திற்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
அதையடுத்து, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், சுவாமி தரிசனம் நடந்தது. சுற்று வட்டார த்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஒயிலாட்டம், மயிலாட்டம், கும்மி பாடல்கள் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை, கோவில் தர்மகர்த்தாக்கள், ஊர் மக்கள் செய்திருந்தனர்.