சென்னை : காளிகாம்பாள் கோவில் வசந்த நவராத்திரி இன்று ஆரம்பமாகவுள்ளது.நான்கு நவராத்திரிகளில் வசந்தத்தை வரவேற்கும் காலத்தில் துவங்கும் வசந்த நவராத்திரி, பாரிமுனையில் பிரசித்தி பெற்ற காளிகாம்பாள் கோவிலில் இன்று முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படவுள்ளது. இதுகுறித்து காளி உபாசகர் காளிதாஸ் சிவாச்சாரியார் கூறியதாவது: இன்று காலை லட்சார்ச்சனையுடன் விழா துவங்குகிறது. வருகிற 31ம் தேதி வரை ஒன்பது நாட்களும் உற்சவ அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது. ஸ்ரீ சக்கர விமானத்தில் அம்பாள் கொலுவீற்றிருப்பாள். காலை மற்றும் மாலை என இருவேளையும் அம்பாளுக்கு குங்கும லட்சார்ச்சனை நடக்கும். வசந்தத்தை வரவேற்கும் இந்த வசந்த நவராத்திரி, நான்கு நவராத்திரிகளில் ஒன்றாகும். ஸ்ரீ துர்காதேவியை வசந்த நவராத்திரியில் (சித்திரை) ரக்த தந்திகா என்ற தன்மையிலும், சாரதா நவராத்திரியில் (புரட்டாசி) சண்டிகா என்ற தன்மையிலும் பூஜிக்க வேண்டும். இந்த வசந்த காலத்தில், மக்கள் அனைவரும் வசந்தமுடன், நோய் நொடியின்றி, அந்தந்த காலங்களுக்கு ஏற்ப நீர்வளம் உள்ளிட்ட அனைத்து வளங்களும் பெற்று, இன்னல்கள் இன்றி வாழ ஒன்பது நாட்களும் இறைவனைப் போற்றிப் பிரார்த்திக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.