விவசாயி ஒருவரின் வயலில் பயிர்களை காகங்கள் திருடி தின்று வந்தன. அவரது வீட்டில் வளர்ந்த கிளி ஒன்று அந்த காகங்களுடன் நட்பாக பழகியது. இந்நிலையில் பயிர்களை சேதப்படுத்திய காகங்களைக் கொல்ல துப்பாக்கியுடன் புறப்பட்டார் விவசாயி. குண்டு ஒன்று தவறுதலாக கிளி மீது பாய்ந்து இறக்கை முறிந்தது. காயம்பட்ட கிளிக்கு விவசாயி மருந்திட்டார். அங்கு வந்தான் விவசாயியின் மகன். அவனும், கிளியும் நல்ல நண்பர்கள். ”கிளியே! உனக்கு என்னாச்சு” என்றான். ”கெட்ட சிநேகிதம், கெட்ட சிநேகிதம்,” என்றது கிளி. இதில் காகங்கள், கெட்டவர்களுடன் ஒப்பிடப்படுகிறது. அவர்களுடன் சேர்ந்ததால் கிளிக்கும் காயம் ஏற்பட்டது. நல்லவருடன் மட்டும் உறவாட வேண்டும் என்பதே கதை நமக்கு உணர்த்தும் பாடம். ”துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே. தீயோருடைய வழியில் நடவாதே” என்ற உண்மை இதன் மூலம் புலப்படுகிறது.