பதிவு செய்த நாள்
25
ஜூலை
2019
12:07
ஓசூர்: தேன்கனிக்கோட்டை மந்தை வெளி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தேர்ப்பேட்டை மந்தைவெளி மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் (ஜூலை., 23ல்) துவங்கியது. அன்று மதியம், 2:00 மணிக்கு கூழ் ஊற்றுதல், மாலை, 6:00 மணிக்கு தேவராஜ் ஏரியில் கங்க பூஜை மற்றும் மாலை, 6:30 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் அக்னி குண்டம் இறங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவில், முக்கிய நிகழ்ச்சியாக நேற்று (ஜூலை., 24ல்) காலை, உத்தண்டி மாரியம்மன், சேலத்து மாரியம்மன், ஓம்சக்தி மாரியம்மன், பட்டாளம்மன், கங்கையம்மன், எல்லம்மன் ஆகிய கோவில்களில் இருந்து வாய் மற்றும் முதுகில் அலகு குத்திய பக்தர்கள், கிரேனில் தொங்கியபடி நகரில் ஊர்வலமாக சென்றனர். வாகனங்களையும் இழுத்து சென்றனர்.
அதேபோல் மாவிளக்கு ஊர்வலமும் நடந்தது. இறுதியாக தேர்ப்பேட்டை மந்தைவெளி மாரியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தி விரதத்தை முடித்தனர். பின் ஆடு, கோழிகளை பலி கொடுத்து பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி நேற்று (ஜூலை., 24ல்) தேன்கனிக்கோட்டை நகரம் விழாக்கோலம் பூண்டது. நகர் முழுவதும் மாவிலை மற்றும் வேப்பிலை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது. தேன்கனிக்கோட்டை போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.