காளி பக்தரான வாலை சித்தர் பதினெட்டாம் நுாற்றாண்டில் வாழ்ந்தார். இவரது இயற்பெயர் வேலாயுதசுவாமி. இவரது பெற்றோர் வேலையன், அடக்கியம்மாள். சித்தன் போக்கு சிவன் போக்கு என எண்ணமுடன் வளர்ந்தார்.
’என் காளிக்கு உணவு கொடு’ என்று அம்மாவிடம் கேட்பார். உணவைச் சாப்பிட்டதும், அன்னை காளியே சாப்பிட்டதாக அம்மாவிடம் தெரிவிப்பார். பசித்தால் வீட்டில் தான் சாப்பிட வேண்டும் என நினைக்க மாட்டார். ஒரு நாள் பசிக்கும் சமயத்தில் கொல்லங்குடி வெட்டுடையாள் காளி கோயிலில் இருந்தார்.
கருவறையில் காளி வலது காலை மடித்து அமர்ந்த நிலையில், கைகளில் கேடயம், வில், அம்பு ஏந்தியபடி காட்சியளித்தாள். அம்மனுக்கு பிரசாதம் படைக்க உணவு தயாராகி கொண்டிருந்தது.
”சாப்பாடு கொஞ்சம் கொடுங்களேன்” என பூசாரியிடம் கேட்டார்.
”அம்மனுக்குப் படைத்த பிறகே கொடுப்போம்” என அவர் பதிலளித்தார்.
“நான் காளியின் மகன்” என்று வலதுகையை நீட்டினார்.
பூசாரி உள்ளிட்ட பக்தர்கள் அனைவரும் சிரித்தனர்.
”பிரசாதத்தை முதலில் பெறும் அளவுக்கு பெரிய ஆளா நீ? முடிந்தால் நீயே எடுத்துக் கொள்” என்றார் பூசாரி.
“இல்லை.. அப்படி நான் எடுப்பது கூடாது. நீங்களாகவே கொஞ்சம் கொடுங்கள்” என்றார்.
பேச்சை பொருட்படுத்தாமல் காளிக்கு உணவு படைத்தார் பூசாரி. அதில் சிறிது எடுத்துக் கொண்டு வேலாயுதசுவாமி கோயிலில் இருந்து வெளியேறினார். அப்போது கருவறையில் அசரீரி ஒலித்தது.
’என் மகனுக்கா இந்த கதி? அவனை மதிக்காத இடத்தில் நானும் இருக்க மாட்டேன்; அவனுடன் செல்கிறேன்’ என குரல் கேட்டது.
அடுத்த நிமிடம் கோயிலின் பிரகாசம் மறைந்தது.
”சுவாமி...சுவாமி...” என சப்தமிட்டபடி பக்தர்கள் பின்தொடர்ந்தனர். வேலாயுதசுவாமியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர்.
”சரி... காளியம்மன் இங்கேயே இருக்கட்டும்” என்றார் வேலாயுதசுவாமி. அன்று முதல் பக்தர்கள் அவரைச் ’சித்தர்’ என அழைத்தனர்.
ஒருமுறை மன்னர் மருது சகோதரர்கள் சித்தரை தரிசிக்க வந்தனர்.
”ஒரு துண்டு நிலம் அளித்தீர்கள் என்றால் ஆஸ்ரமம் அமைப்பேன்” என்றார் சித்தர்.
”சுவாமி! தங்களின் மகிமையை நாங்கள் காண விரும்புகிறோம்” என்றனர் மருது சகோதரர்கள். சிறிது நேரம் கண் மூடி சித்தர் தியானத்தில் ஈடுபட, அவர்களுக்கு காட்சியளித்தாள் காளி.
வணங்கி மகிழ்ந்தனர் மருது சகோதரர்கள். ஆனால் அவர்களின் குதிரைகள் காளியைப் பார்த்து மிரண்டு ஓடின. இதுவும் நன்மைக்கே என கருதிய அவர்கள், ” எவ்வளவு தூரம் குதிரைகள் ஓடுகிறதோ அப்பகுதி உங்களுக்கு தானமாக அளிக்கிறோம்” என்றனர். குறிப்பிட்ட தூரத்தில் குதிரைகள் நின்று கனைத்தன. வாக்களித்தபடி நிலம் சித்தருக்கு தரப்பட்டது.
இலங்கைக்குச் சென்ற சித்தர், குருநாதரான பொங்கி சுவாமி என்பவரைச் சந்தித்தார். அவர் வழிகாட்டுதலால் ஆன்மிக பயிற்சிகளில் ஈடுபட்டார். வராகியம்மனின் அருளைப் பெற யாகம் நடத்துமாறு சொல்லி விட்டு, பொங்கிசுவாமி யாத்திரை புறப்பட்டார். யாகம் முடியப் போகும் நேரத்தில் உக்கிர வடிவில் வராகி வெளிப்பட்டாள். அதை தாங்க முடியாமல் சிலருக்கு உயிர் போனது. ஆனால் சித்தர் யாகத்தை நிறைவேற்றினார்.
அதற்குப் பரிசாக இளம் பெண்ணாக காட்சியளித்தாள் வராகி. இதனை அம்மனின் ’வாலை’ வடிவம் என்பர். இலங்கையில் இருந்து சித்தர் புறப்பட்ட போது ’வாலை’ யும் பின்தொடர்ந்தாள். இதனால் ’வாலை சித்தர்’ எனப் பெயர் பெற்றார். சிலர் ’வேலாயுத வாலை சித்தர்’ என்றும் அழைத்தனர். உலக நன்மைக்காக அவ்வப்போது சித்து வேலைகளில் ஈடுபட்டார்.
குறிப்பிட்ட நாளில் ஒரு குழியை வெட்டி அதில் சமாதிநிலையில் ஆழ்ந்தார். வாலை அம்மனும் சித்தருடன் ஐக்கியம் அடைந்தாள். திருப்புத்தூர் – சிவகங்கை சாலையிலுள்ள சாமியார் மடத்தின் கட்டாம்பூர் தண்ணீர் பந்தலில் இவரது சமாதி உள்ளது.