பதிவு செய்த நாள்
31
ஜூலை
2019
02:07
தஞ்சாவூர் : நம் பாரத நாட்டில் ஐந்து நதிகள் பாயும் பகுதியை பஞ்சாப் என்று அழைப்பது போன்று தமிழ்நாட்டில் ஒரே தலத்தைச் சுற்றி ஐந்து நதிகள் ஓடுவதால், அத்தலம் திருஐயாறு, திருவையாறு(தஞ்சாவூர் மாவட்டம்) என்று அழைக்கப்படுகிறது. காவிரி, கொள்ளிடம், குடமுருட்டியாறு, வெண்ணாறு, வெட்டாறு ஆகியவை இந்நதிகளாகும் . இத்தலத்தில் சூரியபுஸ்கரணி , சந்திர புஸ்கரணி, கங்கை, பாலாறு, நந்திதீர்த்தம் ஆகியவை சேர்ந்திருப்பதாக ஐதீகம்.
இதனைத் தென் கயிலாயம் என்பர். இங்கு மிகவும் அழகான அப்பர் ஸ்வாமிகளின் திருவுருவம் உள்ளது. இவ்விடத்தில் தான் ஆண்டுதோறும் , அப்பர் பெருமான் கயிலைக் காட்சி கண்டுகளித்த திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழா ஆடி அம்மாவாசை அன்று நடைபெறுகிறது. அப்பருக்குத் தரிசனம் தந்தருளிய மூர்த்தி இக்கோவிலில் விளங்குகிறார். அப்பர் கயிலாய தரிசனம் கண்ட குளம் கோவிலுக்குள் வடமேற்கில் அமைந்துள்ளது. அப்பர் ஸ்வாமிகள் , தனது தளர்ந்த வயதிலும் , திருக்கயிலை சென்று அங்கு இறைவனைக் கண்டே தீருவேன் என்று உறுதியுடன் வடதிசை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இறைவன் ஒரு முனிவர் வடிவில் அவர் முன் தோன்றி கயிலையை மானிடர் தனது ஊனக் கண்ணால் கானல் காணல் அரிது என்று கூறி திரும்பிச் செல்ல கூறினார். அப்பர் மறுக்கவே , முனிவரும் ஒரு பொய்கையில் மூழ்குமாறு கூறினார். அப்பரும் அவ்வாறே அப்பொய்கையில் மூழ்கி, திருவையாற்றிலுள்ள இத்திருக்குளத்தில் எழுந்தார். இறைவனும் அவருக்கு கைலைக் காட்சியைக் காட்டியருளினார். இத்திருவிழாவினைக் காண மக்கள் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கில் கூடுவர்...
ஆடிஅமாவாசை புதன்கிழமை கைலாயம் காட்சி சிறப்பாக சந்திர தீர்த்தில் நடைபெற்றது. கிழக்கு கோபுரம் வாயிலில் கைலாயம் காட்சி தருமை ஆதீனம் தலைமையில் நடைபெற்றது.