பதிவு செய்த நாள்
26
மார்
2012
11:03
ஈரோடு: ஈரோடு ஸ்ரீ பெரியமாரியம்மன் வகையறா கோவில்களின் குண்டம் தேர்த்திருவிழாவில், கம்பம் நடும் விழா நடந்தது.ஈரோடு பெரிய மாரியம்மன் வறையறா கோவில்களின் குண்டம் தேர்த்திருவிழா கடந்த 20ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணிக்கு பட்டாளம்மனுக்கு அபிஷேகம், காவிரியாற்றிலிருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு, 10.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில், சின்ன மாரியம்மன் கோவில், நடு மாரியம்மன் கோவில்களில் கம்பம் நடும் விழா கோலாகலமாக நடந்தது. நேற்று அதிகாலையிலிருந்து ஈரோடு மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மேளதாளம் முழங்க, கருங்கல்பாளையம் காவிரியாற்றிலிருந்து தீர்த்தக் குடம், பால் குடம், அக்னிசட்டி, கரும்பு தொட்டில், சூலம் கோவிலுக்கு எடுத்து வழிபட்டனர். பல வகை அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவிலில் நீண்ட வரிசையில் நின்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, ஏழாம் தேதி வரையிலும் இரவு, பகலாக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். திருவிழாவை முன்னிட்டு, கோவில் பகுதிகளில் இலவசமாக நீர்மோர், கூழ், அன்னதானம் வழங்கப்படுகிறது. மார்ச் 28ம் தேதி இரவு 10.30 மணிக்கு கிராமசாந்தி, 29ம் தேதி மாலை 5 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சிகள், ஏப்ரல் 3ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில் குண்டம் "பூ மிதித்தல், இரவு 9 மணிக்கு மாவிளக்கு, கரகம், பெரிய மாரியம்மன் விசேஷ அலங்காரத்துடன் திருவீதி உலா நடக்கிறது. ஏப்ரல் 4ல் காலை 9.30 மணிக்கு பொங்கல் விழா, சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து தேர்வடம் பிடித்தல் மீண்டும் மாலை 4 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்ரல் 5, மாலை 4 மணிக்கு தேர்வடம் பிடித்தல், இரவு ஸ்ரீ பெரியமாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதி உலா நடக்கிறது. ஏப்ரல் 6, மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்து சின்ன மாரியம்மன் சந்நிதி நிலை சேருதல், இரவு சின்ன மாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதி உலா, காரைவாய்க்கால் மாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதி உலா நடக்கிறது. ஏப்ரல் 7ம் தேதி மாலை 3 மணிக்கு கம்பங்களை எடுத்து மஞ்சள் நீர் விழாவுடன் வழக்கப்படி காரை வாய்க்காலில் விடுதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 8ம் தேதி காலை 10 மணிக்கு மறு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுப்ரமணியன், தக்கார் தனபாலன் மற்றும் பக்தர்கள் செய்கின்றனர்.