திருப்புல்லாணி: -சேதுக்கரை மன்னார் வளைகுடா கடற்கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதல் பிற்பகல் வரை பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு பித்ருக் கடன், தர்ப்பணம், திதி உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை செய்தனர். வெளி மாவட்டங்களில் இருந்தும், ராமநாதபுரம் மாவட்ட சுற்றுவட்டார கிராமப்பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று பித்ரு கடன் பூஜைகளை புரோகிதர்கள் மூலம் செய்து வழிபாடு செய்தனர்.
சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேதுக்கரை செல்லும் வழியில் உள்ள தமிழ்மாமுனிவர் அகத்தியர், விநாயகர் கோயிலின் முன்பு சிதறு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
* திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயிலில் காலை முதல் பாலாபிஷேகம் நடந்தது. அன்னதானம் நடந்தது.
*மூக்கையூர் கடற்கரையில் பக்தர்கள் நீராடி சங்கல்ப பூஜைகளை செய்தனர்.
சேதுக்கரை விழா துளிகள்: பஸ், வேன், உள்ளிட்ட வாகனங்களை 2 கி.மீ., க்கு அப்பால் அகத்தியர் குளம் அருகே பார்க்கிங் செய்தனர். அகத்தியர் குளத்தில் இருந்து சேதுக்கரை வரை ஆட்டோவில் செல்ல 10 ரூபாய் கட்டணம் வசூலித்தனர்.