திருவள்ளூர் : மணவூர் ஆனந்தவல்லி சமேத திருநந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. பராமரிப்பின்றி சிதிலமடைந்திருந்த இக்கோவிலை சீரமைக்க, அக்கிராம மக்கள், 10 ஆண்டுகளுக்கு முன் திருப்பணிகளை துவக்கினர். இப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவையொட்டி, 21ம் தேதி காலை 9 மணிக்கு கணபதி ஹோமம், தன பூஜை நடந்தது. 22ம் தேதி நவகிரக ஹோமம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தினமும் காலை, மாலை என இரு வேளையும் யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை 9 மணிக்கு, புனித கலசங்கள் ஊர்வலமாக கோவில் விமானங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. தொடர்ந்து கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், மணவூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். தொடர்ந்து மகா அபிஷேகமும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும் நடந்தது.