பதிவு செய்த நாள்
05
ஆக
2019
03:08
வீரபாண்டி: மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவையொட்டி, நடப்பட்டுள்ள கம்பத்துக்கு, ஏராளமான பெண்கள் பால் ஊற்றி வழிபட்டனர். ஆட்டையாம்பட்டி, பெரிய மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா, கடந்த, 31ல், பூச்சாட்டுதல், கம்பம் நடுதலுடன் தொடங்கியது. இதை யொட்டி, தினமும் ஏராளமான பெண்கள், விரதமிருந்து பால், தண்ணீரை கொடி மரத்துக்கு முன் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு ஊற்றி வழிபட்டு வருகின்றனர். நேற்று (ஆக., 4ல்), மூலவர் அம்மன், கையில் கிளியுடன், மதுரை மீனாட்சி அலங்காரத்தில் அருள்பாலித்தார். தினமும் மாலை, உற்சவர் அம்மனை, சிங்க வாகனத்தில் எழுந்தருளச் செய்து, வீதி உலா கொண்டுவருகின்றனர்.
வரும், 8ல் கொடியேற்றம், 13ல் சத்தாபரணம், 14ல், குண்டம் இறங்குதல், தேரோட்டம், 15ல் பொங்கல் வைத்தல், 16ல், வண்டி வேடிக்கை நடக்கவுள்ளது. அதேபோல், வேலநத்தம் பாவடி யிலுள்ள செங்குந்தர் சின்ன மாரியம்மன் கோவிலில், நேற்று, பூச்சாட்டுதலுடன் ஆடி திரு விழா தொடங்கியது. வரும், 7ல் கம்பம் நடுதல், 15ல் பொங்கல் வைத்தல் நடக்கவுள்ளது.
கிடா வெட்டி...: சங்ககிரி, புது பஸ் ஸ்டாண்ட் அருகே, கழுகுமேட்டிலுள்ள, சாந்த காளியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 24ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று (ஆக., 4ல்), பாரதி நகர், விநாயகர் கோவிலில் இருந்து, திரளான பக்தர்கள், கரகம், அரிவாளுடன், முப்பாடு அழைத்து, ஊர்வலமாகச் சென்று, கோவில் வளாகத்தில், கிடாவை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, சுவாமியை தரிசித்தனர்.