பதிவு செய்த நாள்
06
ஆக
2019
02:08
மடத்துக்குளத்தில், அமராவதி ஆற்றங்கரையிலுள்ள கொழுமம், கொமரலிங்கம் கிராமங் களில், பல நுாறு ஆண்டுகளுக்கு முன், மீன்பிடி தொழில் வளம் பெற்று இருந்தது.
இதில், பலர் பரம்பரையாக ஈடுபட்டிருந்தனர்.ஆற்றில் நீண்ட தொலைவுக்கு, இரவு நேரத்தில் செல்லும் மீனவர்கள், இருளைக்கண்டு அச்சம் அடைந்தனர். பயம் நீங்க சங்கிலி கருப்பன் வழிபாட்டில் ஈடுபட்டனர்.கொழுமத்தில் அமராவதி ஆற்றின் நடுவே, பெரிய பாறையில் வேல், அரிவாள், சூலம், நட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்களை, நீண்ட சங்கிலியால் குறுக்கும், நெடுக்குமாக கட்டி வைத்து உள்ளனர்.
சங்கிலியின் இருமுனையும் பாறையுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இவற்றை திருநீறு, சந்தனம், குங்குமத்தால் அலங்கரித்து வழிபடுகின்றனர். ஆயுதங்களில் எலுமிச்சம்பழம் குத்தியும், சுருட்டு வைத்தும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.பாறை மீதுள்ள சங்கிலி தான், சுவாமியின் உருவகமாகவும், ஆயுதங்கள் சுவாமியின் உடமைகளாகவும் போற்றப்படுகிறது. பல தலைமுறையாக சங்கிலி கருப்பன் வழிபாடு நடக்கிறது.
சுவாமி அருளால், குழந்தைகளுக்கு சங்கிலி என பெயர் வைக்கும் வழக்கம் இந்தப்பகுதியில் உண்டு.மீன் பிடிக்க செல்பவர்களுக்கு வழிகாட்டுவதாகவும், மக்களை தீய சக்திகளிடமிருந்து காப்பதாகவும், நம்பிக்கை உள்ளது. அனைத்து நாட்களிலும் பக்தர்கள் வழிபடுகின்றனர். சித்திரை மாதம் சங்கிலிக்கருப்பனுக்கு, விழா நடக்கிறது.