இங்கிலாந்தில் வசித்த பெண் ஒருத்தி, கவர்னரிடம் விண்ணப்பம் ஒன்றை கொடுத்தாள். அதில் அனாதை விடுதி கட்ட இடம் ஒதுக்கித் தருமாறு கேட்டிருந்தாள். பாறைகள் நிறைந்த நிலத்தை ஒதுக்கினார் கவர்னர். எல்லாம் நன்மைக்கே என எண்ணிய அப்பெண், பாறைகளை உடைத்து, கட்டடம் கட்ட ஏற்படும் செலவை எண்ணிப் பார்த்தாள். மலைப்பாக இருந்தது. இருந்தாலும் அப்பெண் நம்பிக்கையுடன் இருந்தாள். சில நாட்கள் கழிந்திருக்கும். ஒரு கான்ட்ராக்டர் அந்த பெண்ணை தேடி வந்தார். “சகோதரி! நான் கடலில் ஒரு பாலம் கட்ட ஒப்பந்தம் செய்துள்ளேன். அதற்கு நிறைய கற்கள் தேவைப்படுகிறது. தங்கள் நிலத்திலுள்ள பாறைகளை உடைத்துக் கொள்ள அனுமதி தாருங்கள்! நீங்கள் கேட்கும் பணத்தை தருகிறேன்” என்றார். பெருந்தொகை கிடைக்கவே, அப்பெண்ணும் சம்மதித்தாள். பாறைகள் உடைக்கப்பட்டன. விடுதி கட்டும் பணி எளிதாக முடிந்தது. நம்பிக்கை நம்மை வாழ வைக்கும் என்பது உண்மை தானே!