பதிவு செய்த நாள்
09
ஆக
2019
10:08
அத்திவரதர் தரிசன வைபவம் வரும், 16ம் தேதியுடன் நிறைவடையும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதுமுள்ள இந்துக்களின் வேண்டுகோளை ஏற்று, தரிசனத்தை 108 நாட்கள் வரை நீட்டிப்பது குறித்து, கோவில் பட்டாச்சாரியார்கள் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, கோடிக்கணக்கான பக்தர்களிடம் நிலவுகிறது. தமிழக கோவில்கள் இதுவரை கண்டிராத ஆன்மிக எழுச்சியாக, அத்திவரதர் தரிசனம் அமைந்திருக்கிறது. காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலிலுள்ள அனந்த புஷ்கரணியில் இருந்து அத்தி வரதர், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே வந்து, ஒரு மண்டலம், அதாவது, 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்நுாற்றாண்டில், முதன்முறையாக இந்தாண்டு, அனந்த புஷ்கரணியில் இருந்து வெளியே வந்த அத்தி வரதர், கடந்த, ஜூலை 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்; இதுவரை, 60 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளனர்.
தமிழகம் என்றுமே ஆன்மிக பூமிதான் என்பதற்கு இக்காட்சியே சாட்சி. நாள்தோறும், 3 லட்சம் பேர் வரை திரளுவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், மாவட்ட நிர்வாகமே திணறி வருகிறது. அத்தி வரதர் தரிசன வைபவத்தால், வரதராஜ பெருமாள் கோவிலில் நடக்க வேண்டிய அன்றாட பணிகள் நடக்கவில்லை. தமிழகம் மற்றும் பிறமாநில மக்கள் மட்டுமின்றி, வெளிநாடுவாழ் இந்துக்களும், வாழ்நாளில் ஒரு முறையாவது அத்தி வரதரை நேரில் தரிசித்துவிடமாட்டோமா என, சாரை சாரையாக வருகின்றனர்.
டோனர் பாஸ்களை பிளாக்கில் விற்கும் அளவிற்கும், டூப்ளிகேட் தயாரிக்கும் அளவிற்கும் நிலைமை போகிறது என்றால், எந்த அளவிற்கு இந்து மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது என்பது தெரியவரும்.தரிசனம், 48 நாட்கள் மட்டுமே என சொல்லியிருப்பதால், வரும் 16ம் தேதியுடன் காலக்கெடு முடிவதாக, கலெக்டர் அறிவித்துள்ளார். தினமும் மூன்று லட்சம் பேர் வருகின்றனர். இன்னும் ஒரு வாரமே இருப்பதால் இந்த எண்ணிக்கை நான்கு லட்சம் பேராக அதிகரிக்க வாய்ப்புள்ளது. கட்டுக்கடங்காத கூட்டம் அதிகரிப்பால் ஏற்படப்போகும் விபரீதத்துக்குமுன் வைணவ பெரியவர்களை அழைத்து, 108 நாட்களாக தரிசனத்தை நீட்டிக்கலாமா என்பது குறித்து, அரசு ஆலோசனை நடத்தி முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
வைணவ திவ்ய தேசங்களை குறிப்பிடும் வகையில், 108 நாட்கள் தரிசனம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களிடம் நிலவுகிறது. இதற்கு வைணவ ஆச்சாரியார்கள், ஜீயர்கள், ஆன்மிகவாதிகளிடம் ஆதரவு பெருகி வருகிறது.அத்தி வரதரை வெளியில், 108 நாட்கள் வைக்கக்கூடாது என்று கல்வெட்டு, ஓலைச்சுவடி, வரலாற்று சான்றுகள் ஏதும் இல்லை எனக்கூறும் தொல்லியல் துறை ஆய்வாளர், டாக்டர் நாகசாமி, அது குறித்து, வைணவ பெரியவர்களும், பட்டாச்சாரியார் களும் முடிவு செய்யலாம் என்கிறார். அத்தி வரதருக்கு அங்கு தினமும், பூஜையோ, ஆராதனையோ எதுவும் நடைபெறாததால், காலநீட்டிப்பு செய்வதன் மூலம், எந்த ஆகம விதிகளையும் மீறியதாக ஆகாது; 108 நாட்கள் வைப்பது, உலகளவில் இருக்கும் இந்து மக்களுக்கு ஒரு நல்ல செய்தியாக அமையும் என்றும் கூறுகிறார். இந்து சமய அறநிலைத்துறை தரப்பில் கூறுகையில், அத்தி வரதரை, 108 நாட்கள் வெளியில் வைப்பதால், தகுந்த ஏற்பாடுகளை செய்திட எங்களுக்கு கால அவகாசமும், ஆசுவாசமும் கிடைக்கும். ஒரு மண்டலத்துக்குப்பின், 5 நாட்கள் தரிசனத்தை நிறுத்தி, மீண்டும் துவக்கினால் எவ்வித அசம்பாவிதமும் நேராதவாறு முன்னேற்பாடுகளை செய்திட இயலும். உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து தரிசிக்கவும் வாய்ப்பு கிடைக்கும்; இது, நல்ல திட்டம்தான். தாராளமாக, காலக்கெடுவை நீட்டிக்கலாம் என்கின்றனர்.
ஆன்மிக பெரியவர்கள் கூறுகையில், 400 ஆண்டுகளுக்குமுன் அத்தி வரதர் வெளியில் இருந்துதான் அருள்பாலித்துள்ளார். ஆங்கிலேயரிடம் இருந்து அத்தி வரதரை காப்பாற்றவே அனந்த புஷ்கரணியில் வைக்கப்பட்டார். எனவே, குறிப்பிட்ட நாட்களில் மீண்டும் அவரை, பழைய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்ற வரலாற்று சான்றாவணங்கள் ஏதும் இல்லை; தாராளமாக, தரிசன வைபவத்தை, 108 நாட்களாக அதிகரிக்கலாம். உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் தரிசிப்பதற்கு வசதியாக இருக்கும். மக்களிடம் ஆன்மிக விழிப்புணர்வு மேலோங்கும். பாரம்பரிய கலாசாரம் பிரகாசிக்கும் என்றனர்.
அத்தி வரதரை தரிசிக்க இன்னும் ஒரு வாரகால அவகாசமே இருப்பதால், அதற்குள் எப்படியாவது தரிசித்துவிட வேண்டும் என்ற ஆவலில் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை, அபரிமிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால், ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், சம்பந்தப்பட்ட பட்டாச்சாரியார்களே பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும்; அதற்கு இடமளிக்காமல், இப்போதே விரைந்து முடிவெடுப்பது நல்லது.
அதிக கட்டணம்.. பக்தர்கள் அவதி: அத்தி வரதரை தரிசிக்க காஞ்சிபுரத்துக்கு வருகை தரும் பக்தர்களிடம் ஆட்டோ டிரைவர்கள் 300, 400 ரூபாய் வசூலிப்பதும், சாதாரண தங்கும் விடுதிகளில்கூட, மூன்றாயிரம், நான்காயிரம் ரூபாய் கட்டணம் பறிப்பதும் நடக்கிறது. தரிசன வைபவ காலத்தை நீட்டித்தால், போதுமான அவகாசம் கிடைத்து, மக்கள் நிதானமாக வந்து தரிசித்து செல்லவும், கட்டணக்கொள்ளையில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் வழி ஏற்படும். இதுவும், கோவில் பட்டாச்சாரியார்களின் கையில்தான் உள்ளது.
முதல்வருக்கு அனுப்பலாம்: அத்தி வரதர் தரிசனத்தை, 108 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என விரும்பும் பக்தர்கள், தங்களது வேண்டுகோளை தமிழக முதல்வருக்கு அனுப்பலாம். முகவரி: தமிழக முதல்வர், தலைமை செயலகம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை - 600 009.
- இல.ஆதிமூலம்