பதிவு செய்த நாள்
09
ஆக
2019
01:08
தர்மபுரி: வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் உள்ள பூக்கடைகளில், ஏராளமான மக்கள் நேற்று (ஆக., 8ல்), பூ வாங்க குவிந்தனர்.
தர்மபுரி மாவட்டம், விவசாயத்தை பிரதானமாக கொண்ட மாவட்டமாகும். இதில், தர்மபுரி, தொப்பூர், பென்னாகரம், பாலக்கோடு, மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் அதிகளவில், பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில், தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால், குறைந்த நீரை பயன்படுத்தி, சொட்டுநீர் பாசனம் மூலம், பூக்கள் சாகுபடி செய்கின்றனர்.
இவற்றை, தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில் உள்ள பூ கடைகளுக்கு, விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இங்கு நேற்று, குண்டுமல்லி, சம்பங்கி, அரளி, கனகாம்பரம் பூக்கள் விற் பனையானது. தற்போது ஆடி மாதம் மற்றும் கோவில் திருவிழாக்கள் அதிகளவு நடப்பதால், பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. இன்று (ஆக., 9ல்) வரலட்சுமி விரதம் கடைபிடிப்பதால், பூக்கள் வாங்க, இங்கு மக்கள் குவிந்தனர்.
இதில், ஒரு கிலோ கனகாம்பரம், 800 ரூபாய், குண்டுமல்லி, 300, ஊசிமல்லி, 500, சம்பங்கி, 160, ரோஜா ஒருகட்டு, 70, பட்டன்ரோஸ், 160, சாமந்தி 30 மற்றும், செண்டுமல்லி, 50 ரூபாய் என, விற்பனையானது. இதேபோல், தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டிலும், இவ்வாறு பூக்களின் விலை உயர்வு காணப்பட்டது. இந்த விலை உயர்வால், பூ சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.