பதிவு செய்த நாள்
12
ஆக
2019
11:08
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதர் கோவிலில், பொது தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள், 12 மணி நேரம் காத்திருந்து, அத்தி வரதரை, நேற்று தரிசித்தனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஜூலை, 1ம் தேதி முதல், அத்தி வரதர் வைபவம் நடக்கிறது. இதற்காக, நாட்டின் பல பகுதிகளில் இருந்து, பக்தர்கள் வருகின்றனர்.
அத்தி வரதரை, நேற்று மட்டும், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் தரிசித்துள்ளனர். பொது தரிசனத்தில் சென்று தரிசிக்க, 12 மணி நேரம் ஆனதால், கூட்டத்தில் சிக்கிய, 25 பேர், நேற்று மயக்கமடைந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆக., 16ம் தேதி வரை மட்டுமே தரிசனம் என்பதால், வரும் நாட்களில், கூட்டம் மேலும் அதிகரிக்கும். இதனால், கூட்டத்தை சமாளிக்க, மாவட்ட நிர்வாகம், பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பல பகுதிகளில் இருந்து, காரில் வருவோரை, காஞ்சிபுரத்தில் இருந்து, 10 கி.மீட்டருக்கு முன்பே, போலீசார் தடுத்தி நிறுத்தி, பக்தர்கள் ஓய்வு இடத்தில் தங்க வைக்கின்றனர். பின், அங்கிருந்து, சிறப்பு பஸ் மூலம், வரதர் கோவிலுக்கு அழைத்து செல்கின்றனர். இதனால், நேர விரையம் ஏற்படுவதாக கருதும் பக்தர்கள், காரை தவிர்த்து, ரயிலில், காஞ்சிபுரம் வந்து, அத்தி வரதர் தரிசனத்திற்கு செல்கின்றனர். ஊர் திரும்பும் பக்தர்கள், காஞ்சிபுரம் பழைய மற்றும் புதிய ரயில் நிலையங்களுக்கு வரும்போது, அங்கும், கூட்ட நெரிசலால், டிக்கெட் எடுக்க சிரமப்படுகின்றனர்.