பதிவு செய்த நாள்
15
ஆக
2019
03:08
சென்னை:மயிலாப்பூர் சங்கர மடத்தில், ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, இன்று, பூணுால் மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது.ஆண்டுதோறும், ஆடி அல்லது ஆவணி மாதத்தில், அவிட்டம் நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி நாள், ஆவணி அவிட்டமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, ரிக் அல்லது யஜுர் வேதத்தை கடைப்பிடிக்கும், உபநயனம் செய்து கொண்ட அந்தணர்கள், புதிய பூணுால் மாற்றிக் கொள்வது வழக்கம்.சாம வேதத்தை கடைப்பிடிக்கும் அந்தணர்கள், விநாயகர் சதுர்த்தியன்று, புதிய பூணுால் மாற்றிக் கொள்வது வழக்கம். இந்த நிகழ்ச்சி, உபாகர்மா என, சமஸ்கிருதத்தில் அழைக்கப்படுகிறது.ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, மயிலாப்பூர், சித்திரைக்குளம் அடுத்துள்ள சங்கர மடத்தில், இன்று அதிகாலை, 5:30 மணி முதல், சங்கர சாஸ்திரிகள் முன்னிலையில், உபாகர்மா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.சங்கர மடத்தில், பிரம்மயக்ஞம், சங்கல்பம் நடந்து, புதிய பூணுால் அணியும், யக்ஞோபவிதம் செய்யப்படும். இதன்பின், காண்டரிஷி தர்ப்பணம் செய்து, வேத பாராயணம், ஹோமம் நடத்தப்படும்.மாம்பலம், திருவல்லிக்கேணி, நங்கநல்லுார், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், பல கோவில்களில், உபாகர்மா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.