மயிலாடுதுறை : சீர்காழி அருகே கடலில் மீனவர் வீசிய வலையில், கருங்கல்லால் ஆன இரண்டு சாமி சிலைகள் சிக்கின. நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த பூம்புகார் மீனவர் காலனியைச் சேர்ந்தவர் வீரப்பன், 45; மீனவர். நேற்று முன்தினம், தன் படகில் தரங்கம்பாடி கடலில் இழுவை வலை மூலம் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது வலையை இழுத்து பார்த்த போது கருங்கல்லால் ஆன, 2 அடி உயரமுள்ள மீனாட்சியம்மன் சிலை மற்றும் 1 அடி உயரமுள்ள பழனியாண்டவர் சிலைகள் வலையில் சிக்கியிருப்பது தெரியவந்தது. அச்சிலைகளை கரைக்கு கொண்டு வந்து பூம்புகார் போலீஸ் நிலையத்தில் வீரப்பன் ஒப்படைத்தார். போலீசாரின் அறிவுரைப்படி சாமி சிலைகள் அருகிலுள்ள கோவிலில் வைக்கப்பட்டடுள்ளன.