பதிவு செய்த நாள்
21
ஆக
2019
02:08
கோவை:விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று 20ம் தேதி நடந்தது.நாடு முழுவதும் வரும் செப்., 2ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. கோவையில் பல்வேறு இடங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
சிலைகள் வைக்கப்பட உள்ள இடங்கள், எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மாநகர கமிஷனர் அலுவலகத்தில் நேற்று, அனைத்து அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடந்தது.அப்போது, ’போலீஸ் அனுமதியில்லாமல் எந்த இடத்திலும் சிலைகள் வைக்க கூடாது. பதற்றம் நிறைந்த பகுதிகளில், பிற மதத்தினர் புண்படும் வகையில் சுவெரொட்டி ஒட்டக்கூடாது. விசர்ஜன ஊர்வலத்தை போலீசார் அனுமதித்த, குறிப்பிட்ட நேரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும்’ என்பன உட்பட பல்வேறு நிபந்தனைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், துணை கமிஷனர்கள் பாலாஜி சரவணன், பெருமாள் உள்பட பலர் பங்கேற்றனர்.